Published : 06 Jun 2020 10:15 AM
Last Updated : 06 Jun 2020 10:15 AM

வழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம்; மக்கள் இவ்வளவு தொகையை எவ்வாறு கட்ட முடியும்?; கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

வழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீடுகளுக்கான மின் நுகர்வு கணக்கெடுப்படவில்லை. முந்தைய மின் நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்தது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அனைவருக்கும் குறைவான கட்டணமே வந்தது. அதையே மக்கள் கட்டினர். ஆனால் கோடைக் காலம் ஆரம்பித்த மார்ச் முதல் மின் பயன்பாடு அதிகரித்தது. ஊரடங்கால் வீட்டுக்குள் மக்கள் முடங்கியதால் மின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

மே மாதம் வரை பழைய யூனிட் கட்டணத்தை கட்டினால் போதும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ஜனவரி, மார்ச் மற்றும் ஏப்ரல், மே என 2 மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய கட்டணம் கழிக்கப்பட்டு புதிய கட்டணம் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் மக்கள் படும் வேதனைக்கு அடிப்படை காரணமாகும். இதை அதிமுக அரசு நியாயப்படுத்தி பேசுவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கெனவே பொது ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, வருமானத்தை இழந்து, வாழ்வாதாரத்தை பறிகொடுத்த நிலையில் இருக்கும் மக்கள் மீது இத்தகைய சுமையை சுமத்துவதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

தற்போது மின்வாரிய அணுகுமுறையின்படி கணக்கிட்டால் வழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஊரடங்கால் வீட்டுக்குள்ளே முடங்கி, வேலையின்றி தவிக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இவ்வளவு தொகையை எவ்வாறு கட்ட முடியும்?

ஏற்கெனவே வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களிடம் இப்படி பகல் கொள்ளை அடிக்கலாமா? இத்தகைய நடவடிக்கை எரிகிற அடுப்பில் கொள்ளியை பிடுங்கியது போல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, மின் கட்டணத்தை கணக்கிடுகிற முறையை முற்றிலும் மாற்றி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பளுவை குறைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x