Published : 05 Jun 2020 07:02 PM
Last Updated : 05 Jun 2020 07:02 PM
கோவை மாவட்டம் சித்திரைச் சாவடி அணைக்கட்டு, பேரூர் படித்துறை, சூலூர்- இருகூர் பிரிவு ஆகிய பகுதிகளில், ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றைப் புனரமைக்கும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மே 28-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து, நொய்யல் ஆற்றைப் புனரமைக்கும் பணிகளை, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சித்திரைச்சாவடி அணையில் இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “காவிரி வடிநிலத்தின் ஒரு கிளை நதியாக விளங்கும் நொய்யல் நதியினை மீட்டெடுக்கும் முயற்சியாக முதல்வர் நொய்யல் ஆற்றைச் சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் 72 கிலோ மீட்டர் நீளப் பகுதிகளைச் சீரமைக்க மட்டும் இதில் ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் நேரடியாகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும்பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகரித்து, நொய்யல் மீண்டும் உயிர்பெறும். நொய்யல் ஆற்றைப் புனரமைக்கும் பணியை நேரடியாகக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவில் பொதுப்பணித் துறை- நீர்வள ஆதாரம், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய அரசுத் துறைகளின் அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இடம்பெற உள்ளனர்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT