Published : 05 Jun 2020 07:01 PM
Last Updated : 05 Jun 2020 07:01 PM
தமிழகத்தின் ஆனைகட்டியிலிருந்து கேரளாவின் அட்டப்பாடிக்குச் செல்வதற்கு இ-பாஸ் வாங்க வேண்டும் எனும் நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பல கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டிருப்பதால் இரு தரப்பிலும் வாழும் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்திருக்கிறார்கள். அதேசமயம் இ-பாஸ் இல்லாமல் வந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் சூழல் இருப்பதால் பலரும் வருவதற்குத் தயங்குகிறார்கள்.
கரோனா ஊரடங்கில், கோவை மாவட்டத்தின் ஆனைகட்டியிலிருந்து கேரளத்தின் அட்டப்பாடிக்குச் செல்பவர்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனைகட்டிக்கும், அட்டப்பாடிக்கும் இடையிலான எல்லையாக இருப்பது கொடுங்கரைப் பள்ளம், அங்குள்ள பாலத்திற்கு மேற்குப் புறம் கேரளச் சோதனைச் சாவடியும், கிழக்குப் புறத்தில் தமிழகச் சோதனைச் சாவடியும் அமைந்திருக்கின்றன. இரண்டுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளிதான் என்றாலும், கரோனா ஊரடங்கு காரணத்தால் இங்குள்ளவர்கள் அந்தப் பக்கமோ, அங்குள்ளவர்கள் இந்தப் பக்கமோ வர முடியாத சூழல் இருந்தது.
ஆனைகட்டியிலும், அட்டப்பாடியிலும் வசிப்பவர்களின் உறவினர்கள் இரு புறமும் வசிக்கின்றனர். இவர்கள் அங்கிருந்து இங்கோ, இங்கிருந்து அங்கோ சென்றுவர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியே ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றாலும் அதை வைத்து நேரடியாக ஆனைகட்டியிலிருந்து அட்டப்பாடி எல்லைக்குள் அத்தனை எளிதில் நுழைந்துவிட முடியாது. அவர்கள் ஆனைகட்டியிலிருந்து கோவை வந்து (40 கிலோ மீட்டர்), பிறகு கோவையிலிருந்து தென்மேற்கே வாளையாறு சென்று (30 கிலோ மீட்டர்) அங்குள்ள கேரளச் சோதனைச் சாவடியில் இ-பாஸைக் காண்பித்துதான் உள்ளே நுழைய வேண்டும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன.
இப்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு நேரடியாகவே ஆனைகட்டியிலிருந்து அட்டப்பாடிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கென இ-பாஸ் தேவையில்லை என்று பாலக்காடு மாவட்டம், ஒத்தப்பாலம் துணை ஆட்சியர் அர்ஜூன் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். இவர் அட்டப்பாடிக்குத் தற்போது கரோனா நோய்த்தடுப்பு பொறுப்பில் உள்ள மண்டல அதிகாரி ஆவார்.
இதுகுறித்து அட்டப்பாடி, தேக்குவட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி கூறும்போது, “என் பிள்ளைகளே கோவை தொண்டாமுத்தூரில் எங்கள் பெற்றோர் வீட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து மூன்று மாதங்களாகிவிட்டன. இதுபோல இங்கே பிள்ளைகளைப் பிரிந்தோ, பெற்றோர்களைப் பிரிந்தோ ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இ-பாஸ் இருந்தாலும்கூட கேரளத்துக்குள் நுழைய ஒரே வழி வாளையாறு எல்லை மட்டும்தான் என்று சொல்லியிருந்தார்கள். அத்தனை தொலைவு சுற்றிச் செல்வதும் சாத்தியமில்லை.
இந்தச் சூழலில், ஆனைகட்டியில் உள்ள அட்டப்பாடிக்கார்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றைச் சோதனைச் சாவடியில் காட்டி அட்டப்பாடிக்குள் வரலாம் என்று உத்தரவிட்டிருப்பது நிம்மதி தருகிறது. அதேசமயம், இந்த உத்தரவு பெயரளவுக்குத்தான் உள்ளது. இதனால் எந்தப் பயனும் இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஒரு முறை வந்தால் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்; அவர் சார்ந்தவர்களும் வெளியே வரக்கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் இருக்கின்றன. இப்படியான சிக்கல் இருப்பதால் என் பிள்ளைகளை அழைத்து வருவதைக்கூடத் தவிர்த்துவிட்டேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT