Published : 05 Jun 2020 05:29 PM
Last Updated : 05 Jun 2020 05:29 PM
தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர். இதனால் இவற்றின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முகக்கவசத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு அளிப்பதற்காகவும் புழல்-1, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய இடங்களிலுள்ள மத்திய சிறைகளில் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு தலா ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி ஒரு முகக்கவசத்தின் விலை தற்போது ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. (பொறுப்பு) முருகேசனிடம் கேட்டபோது, "புழல் சிறையில் 50 ஆயிரத்து 75, வேலூர் சிறையில் 15 ஆயிரத்து 130, கடலூர் சிறையில் 24 ஆயிரத்து 500, திருச்சி சிறையில் 51 ஆயிரத்து 100, மதுரை சிறையில் 58 ஆயிரத்து 600, பாளையங்கோட்டை சிறையில் 34 ஆயிரத்து 750, கோவை சிறையில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 499 என மொத்தம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 654 முகக்கவசங்கள் தற்போது கையிருப்பில் உள்ளன.
பொதுமக்களின் நலன் கருதி முகக்கவசத்தின் விலையைப் பாதிக்குப் பாதியாகக் குறைத்துள்ளோம். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனி நபர்கள் உள்ளிட்டோர் அந்தந்தப் பகுதிகளிலுள்ள மத்திய சிறை நிர்வாகத்தை அணுகி, தங்களுக்குத் தேவையான அளவு முகக்கவசங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற புழல் சிறை 044-26590615, வேலூர் சிறை 0416 – 2233472, கடலூர் சிறை 04142 – 235027, திருச்சி சிறை 0431 – 2333213, மதுரை சிறை 0452 – 2360301, பாளையங்கோட்டை சிறை 0462 – 2531845, கோவை சிறை 0422 – 2303062 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT