Published : 05 Jun 2020 04:28 PM
Last Updated : 05 Jun 2020 04:28 PM

ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வுக்கான தேதி அறிவிப்பு: 2019-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு தேதியும் அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு (prelims), முதன்மைத் தேர்வுத் (mains) தேதியை மத்திய தேர்வாணையம் அறிவித்தது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (prelims), மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு (interview) அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு மே 31-ம் தேதி அன்று நடக்கவிருந்த முதல்நிலைத் தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.

இந்நிலையில் கரோனோ தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய யூபிஎஸ்சி சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஊரடங்கின் இரண்டாவது கட்டம் முடிவடைந்த பின்னர், இந்த ஆண்டின் மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையிலும், கரோனா தொற்றுப் பாதிப்பு பல மாநிலங்களில் உச்சத்தைத் தொடுவதாலும் தற்போதைய நிலையில் மீண்டும் 2019 சிவில் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் நேர்காணல், 2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims), பொறியியல் சேவைகள் (prelims-முதல் நிலை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதல் நிலை) தேர்வுகள் ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் தேர்வாணையம் மே 20 (இன்று) ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், “நாடு தழுவிய மூன்றாம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் நிலைமையை மதிப்பாய்வு செய்யவும் கோவிட்-19 காரணமாக கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பைக் கவனித்து ஆராய்ந்தது. தேர்வாணையம் இனி கட்டுப்பாடுகள் இருக்காது எனத் தீர்மானித்தது. தற்போது, தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை மீண்டும் தொடங்க முடியும்.

அதன்படி புதிய தேர்வுக்கான தேதியை ஜூன் 5 அன்று தேர்வாணையம் கூடி அன்றுள்ள நிலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் யூபிஎஸ்சி இணையதளத்தில் தேதியை அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தது.

இவ்வாறு அறிவிக்கப்படும் தேர்வுத் தேதி 30 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடிய தேர்வாணையம் முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து மே 31 முதல்நிலைத் தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி

* முதல்நிலைத் தேர்வு (prelims) 2020- அக்டோபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே நாளில் நடைபெறுகிறது.

* முதல்நிலைத் தேர்வில் (prelims) வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு (mains) 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

* ஏற்கெனவே 2019-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு (mains) எழுதி தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வு (interview) 2020- ஆண்டு ஜூலை 20 அன்று நடக்கிறது.

* இதற்கான அழைப்பு மாணவர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்.

* மேற்கண்ட தேர்வுத் தேதிகள் சூழ்நிலையைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்பட்டவை.

இவ்வாறு யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x