Published : 05 Jun 2020 04:02 PM
Last Updated : 05 Jun 2020 04:02 PM
மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கை நீக்கியது தொடர்பாக அறிக்கை வெளியான நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு ஆண்டின் 3 பருவங்களிலும் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வரை உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
இவை அந்தமான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கின் முக்கியத்துவத்தினை உணர்ந்த மத்திய அரசு நோய்த் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக உதகை முத்தோரை பாலாடா பகுதியில் 1957-ம் ஆண்டு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கியது.
இந்த ஆராய்ச்சி நிலையம் சார்பில் நூல்புழு, இலைகருகல் நோய்கள் தாக்காத உருளைக்கிழங்கு விதை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திசு வளர்ப்பு, மகரந்தச் சேர்க்கை போன்ற முறைகள் மூலமாக குப்ரி கிரிதாரி, குப்ரி சூா்யா உள்பட பல வகையான உருளைக்கிழங்கு ரகங்களையும் கண்டுபிடித்து அவற்றின் விதைகளை விவசாயிகளுக்குக் குறைந்த விலைக்கு அளித்து வருகிறது.
இந்நிலையில் உருளைக்கிழங்கினை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால் இங்குள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரே உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையமும் மூடப்படும் நிலையில், இதனைச் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே தேயிலைக்கு விலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உருளைக்கிழங்கு விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளது, இங்குள்ள விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மத்திய அரசு மறு பரிசீலனை செய்து அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கை நீக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT