Published : 05 Jun 2020 03:10 PM
Last Updated : 05 Jun 2020 03:10 PM
ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு 3 மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது என்பது மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜிஎஸ்டி வரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு 3 மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது என்பது மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
திரையரங்குகளுக்கு 28 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி இருந்தது. அதனைக் குறைக்க வேண்டும் என மாநில அரசு செய்த பரிந்துரை காரணமாக, ரூ.100 கட்டணத்துக்குள் 18 சதவீதமும், அதற்கு மேலுள்ள கட்டணத்துக்கு 28 சதவீதமும் என ஜி.எஸ்.டி. விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதேபோல் 30 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியை திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று 8 சதவீதமாக தமிழக முதல்வர் குறைத்தார்.
தற்போது அரசின் பொருளாதார நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். கரோனா பிரச்சினை முடிவடைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
பெருகிவரும் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப நான்கு வழிச்சாலைகளை 6 வழிச் சாலைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது. டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகத்தில் 8 வழி சாலை வசதிகள் வந்தால்தான், விரைவு போக்குவரத்து மூலமாக வணிகம் பெருகும், மக்கள் பயணிக்கும் நேரம் குறையும் என தமிழக முதல்வர் வலியுறுத்தி வந்தார்.
அந்த சாலை அமைக்கப்பட்ட பின்னர் தான் அதன் அருமையை புரியும். இதனை கணக்கில் கொண்டு நீதிமன்றம் சென்றுள்ளோம், என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT