Published : 04 Jun 2020 05:40 PM
Last Updated : 04 Jun 2020 05:40 PM
மத்திய அரசிடம் பலமுறை நிதி கேட்டும் செவி சாய்க்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனாவை முழுமையாக ஒழிப்போம் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருந்தது. தற்போது அதனை மாற்றி கரோனாவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்று எப்படி பரவுகிறது, யார் மூலம் பரவுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திய அளவில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிவார்கள். அதற்கு பிறகு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவார்கள். இதனால் உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூறியதன் அடிப்படையில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பதற்கான நடவடிக்கையைத் தொழிற்சாலை அதிபர்கள் எடுத்து வருகின்றனர்.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரியில் பணிபுரிவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். காய்கறிச் சந்தையை புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பழைய இடத்துக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி அங்கு மாற்றப்பட்டு நேற்று முதல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏ.எஃப்.டி. திடலுக்கு கடைகளை மாற்றி விடுவேன் என எச்சரித்துள்ளேன்.
புதுச்சேரியில் முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த முடியும். தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளது. 80 சதவீத மக்கள் தனிமனித இடைவெளி விட்டு பொருட்கள் வாங்குகின்றனர். ஆனால், ஒருசில கடைக்காரர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். இதனை முறைப்படுத்த வேண்டிய கடமை கடையின் உரிமையாளர்களுக்கு உண்டு. மீறிச் செயல்பட்டால் கடைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காலை புறநோயாளிகள் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அதனால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மருத்துவம் பார்க்க வருபவர்கள் குறைந்த அளவில் நோய் இருந்தாலும் சிகிச்சை பெற விரும்புகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். கரோனா சமயத்தில் பெரிய பாதிப்புகளைத் தவிர்த்து, நோயாளிகள் புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றிய பிறகு மற்ற துறைகள் அங்கு செயல்படவில்லை. இது சம்பந்தமாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோரை அழைத்துப் பேசி அனைத்து மருத்துவமும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்.
கரோனாவைத் தடுத்து நிறுத்தவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு எந்தெந்த அளவில் உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போட்டுள்ளோம். இதற்கிடையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
ஆனாலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ முன்வரவில்லை. நமக்குக் கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி, அரசின் திட்டங்களுக்கு நிதி ஆதாரம், 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரை நிதி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் நிதி எதையும் தரவில்லை. இப்படிப் பல கட்டங்களிலும் மத்திய அரசு நமக்கு உதவவில்லை.
கரோனா சமயத்தில் மத்திய அரசின் நிதி பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இதுகுறித்து நான் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் பேசியுள்ளேன். ஆனால் அதுபற்றி செவி சாய்க்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எல்லா மாநிலங்களும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு மாநிலங்களுக்கு மானியத்தை உயர்த்திக் கொடுப்பதும், நிதி ஆதாரத்தை வழங்குவதும் அவர்களின் கடமையாகும்.
மின்சாரத்தை தனியார் மயமாக்குவது என்பது புதுச்சேரி மாநிலத்துக்குப் பொருந்தாது. புதுச்சேரி மாநிலம் சட்டப்பேரவை உள்ள மாநிலம். யூனியன் பிரதேசம் அல்ல. புதுச்சேரியைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசிக்காமல், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையான முடிவை எடுக்கக்கூடாது. மத்திய மின்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
இதற்கு முன்பு பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் மின்துறையை தனியார் மயமாக்குவதை எங்கள் அரசு ஏற்காது என்று வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எங்களுடைய கடிதத்துக்குப் பதில் வரவில்லை. மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளோம்.
ஆகவே, தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர மாநில அரசை எதிர்த்துப் போராடக்கூடாது. நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மத்திய அரசின் இந்தத் திட்டத்தை நிறுத்த மின்துறை ஊழியர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT