Published : 04 Jun 2020 02:51 PM
Last Updated : 04 Jun 2020 02:51 PM
கேரள மாநிலத்தில் யானை கொல்லப்பட்ட சம்பவம், மனிதாபிமானத்துக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜயகாந்த் இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:
"கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து சிலர் கொடுத்துள்ளன. அதனை அந்த யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.
இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இதுபோன்ற சம்பவங்களின் பிரதிபலிப்பாகத் தான் பார்க்கிறேன்.
யானையை வெடி வைத்துக் கொன்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். காட்டு யானையை கொன்றது ஒட்டு மொத்த மக்களுக்கும் மன வேதனையை உண்டாக்கியுள்ளது"
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT