Last Updated : 04 Jun, 2020 01:56 PM

 

Published : 04 Jun 2020 01:56 PM
Last Updated : 04 Jun 2020 01:56 PM

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 90 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 57 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் புதிதாக வில்லியனூர், கொம்பாக்கம், சுதானா நகர், விவிபி நகர், பூரணாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களில் ஒருவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 8 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 33 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புதிதாக மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 25 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். சேலம், சென்னையில் தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

மாநிலத்தில் மொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,576 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7,447 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 29 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் முதல் 50 நாட்களில் வெறும் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களில் தினமும் 4 முதல் 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஜூன், ஜூலை மாதங்களில் நிச்சயமாக 500 பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு தேவையான படுக்கைகள், மருத்துவ உபகரணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவுதான் நாம் நடவடிக்கை எடுத்தாலும், தளர்வுகள் அதிகரித்தால் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக வருவாய் இல்லாத காரணத்தால் அதிக அளவில் வெளியே நடமாடத் தொடங்கிவிட்டனர். எனவே மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "தினமும் 8 முதல் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 25 நாட்களில் சாதாரணமாக 100-ஐத் தாண்டிவிடும். ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை ஆகிவிடக்கூடாது என்பதில் மக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x