Published : 04 Jun 2020 02:04 PM
Last Updated : 04 Jun 2020 02:04 PM
புகைப்படத்தில், ஒரு குடிசையில் அமர்ந்து குறுமிளகை முறத்தில் புடைத்து மரப்படியில் அளந்துபோடும் இந்தப் பெண்மணி சமைப்பதற்குத்தான் அதைப் பத்திரப்படுத்துறார் என்று நினைக்காதீர்கள்.
“கரோனா வந்ததால பாதி விலைக்குக் கூட இதை வாங்க மாட்டேங்கிறாங்க சாமி. பாதி விலைக்குக் கொடுத்தா பறிச்ச கூலி, காய வச்ச கூலி, புடைச்ச கூலிக்குக்கூட காணாது கண்ணு. அதுதான் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ போகட்டும்னு சுத்தப்படுத்திப் பத்திரப்படுத்தீட்டு இருக்கேன்” என்கிறார் இந்தப் பெண்மணி. கோவை மாவட்டம் வால்பாறைக்கு மேலே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லார் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
இவரது ஊரில் உள்ள 23 காடர் பழங்குடிகளும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் வந்தால் காடுகாடாய்த் திரிந்து குறுமிளகு பறிப்பில் இறங்கிவிடுவார்கள். அதைக் காயப்போட்டு, சுத்தப்படுத்துவார்கள். பின்னர் 5 கிலோ மீட்டர் நடந்தும் 15 கிலோ மீட்டர் பஸ்ஸிலும் தலைச்சுமையாய் கொண்டுபோய் வால்பாறை கடைத் தெருவில் விற்பார்கள். அங்கு வரும் வெளியூர்க்காரர்கள் கிலோவுக்கு 500 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். வியாபாரிகளோ ஒட்டுமொத்தச் சரக்கையும் எடைபோட்டுக் கிலோ 400 ரூபாய் என விலை பேசி, பிடி பணத்தை என்று கரன்சிகளைக் கையில் திணித்துவிட்டு நடையைக் கட்டுவார்கள்.
ஆனால், இப்போது வால்பாறைக்கு நடந்தே சென்று தெருவில் கொட்டி கூவிக்கூவி விற்றாலும் ஆட்கள் வருவதில்லை. அப்படியே வருபவர்கள் மிளகு கிலோ 200 ரூபாய்க்கும் அதிகமாகக் கேட்பதில்லை. அதனால் கொண்டுசென்ற மூட்டையை அப்படியே சுமந்து வந்து வீட்டில் சுத்தப்படுத்தி பத்திரப்படுத்துகிறார்கள் பழங்குடி மக்கள். கையில் சுத்தமாகக் காசில்லை எனும் நிலையில் இருப்பவர்கள் கிடைத்த பணத்துக்கு விற்று விட்டும் வருகிறார்கள்.
கல்லார் கிராமம் மட்டுமல்ல, வால்பாறையைச் சுற்றியுள்ள உடும்பன் பாறை, நெடுங்குன்றம், கவர்கல், கூமாட்டி, கடமன் ரேகு, சங்கரன் கடவு (முதுவர் கிராமம்), பாலகனாறு உட்பட 27 பழங்குடி கிராம மக்களின் கதையும் இதுதான். இவர்கள் சேகரிக்கும் தேன், குங்குலியம், காட்டு நெல்லி, கடுக்காய் போன்ற சிறுவனப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் இதுதான் நிலை.
இதனால் பழங்குடியினர் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்கிறார் பழங்குடியினர் செயல்பாட்டாளர் தனராஜ். இதைப் பற்றி அவர் மேலும் விரிவாகப் பேசினார்.
“இவங்க சிறுவனப்பொருட்கள் சேகரிப்பு என்பது ஏப்ரல், மே மாதங்களில்தான். அதில் கிடைக்கும் வருவாயைத்தான் ஆண்டு முழுவதுமான செலவுகளுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனா இப்ப, கரோனா ஊரடங்கு காரணமா முதலுக்கே மோசம் வந்த மாதிரி துவண்டு போயிட்டாங்க. இங்கே அதிகமா விளையறது மிளகுதான். தேன் அடர்ந்த மலைக் குகையில தேன் எடுப்பாங்க. கிலோ 700 ரூபாய் வரைக்கும் போயிட்டிருந்த தேனின் விலை இப்போ 400 ரூபாய்க்கும் கீழே குறைஞ்சிடுச்சு.
எல்லா கிராமங்களுமே வால்பாறையிலிருந்து 20 - 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைக்காடுகள் தான். இந்தக் கிராமங்களில் மட்டும் எனக்குத் தெரிஞ்சு 2 டன் தேன் சேகரிச்சும் அதை விற்க முடியாம வச்சிருக்காங்க. இப்படி சிறுவனப் பொருட்கள் கிராமங்களில் தேங்கிக் கிடந்ததே கிடையாது” என்ற தனராஜ், இதற்கு அரசு மாற்று வழி செய்யவும் ஆலோசனை சொன்னார்.
“பொதுவா இந்த மாதிரிப் பழங்குடி கிராமங்களில் சிறு வனப்பொருட்களை விற்க அரசு 15 வருஷத்துக்கு முன்பே ஒருசில ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கு. அது இன்னமும் முறைப்படுத்தப்படாததுதான் வேதனை. வனக்குழுக்கள் அல்லது கூட்டுறவு சொசைட்டி மாதிரியான அமைப்புகளை ஏற்படுத்தி இந்தப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்க அதன் மூலமா வழி செய்யணும்.
அதில் ஆதார விலையைக்கூட அரசு நிர்ணயம் செஞ்சு வச்சிருந்தது. அதை யாருமே கொடுக்கறதுமில்லை. செய்யறதுமில்லை. ஆக, அரசாங்கம் கொள்முதல் பண்ற மாதிரி இருந்தால் நல்லது. அதன் மூலம் இந்தப் பழங்குடி மக்களுக்கு நன்மை விளையும். அரசு செய்யுமா?” என்று கேட்கிறார் தனராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT