சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு கூடுதல் கடன்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு கூடுதல் கடன்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு

Published on

மத்திய அரசின் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் 53 ஆயிரம் பேருக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் உடனடியாக கூடுதல் கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடந்த 98 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று நோய் நாடு முழுவதும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தில் ரூ. 20 லட்சம் கோடி இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வங்கிகள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தின் மூலம் கூடுதல் பாதுகாப்பு இல்லாமல் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்களாகிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 29.02.2020 தேதியின்படி அவர்களின் கணக்குகளில் இருப்பு நிலுவையில் உள்ள தொகைக்கு 20 சதவீதம் கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களான 53 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் பயன் அடைவார்கள். இந்த கடனுக்காக உத்தரவாத கட்டணம், பிராசசிங் கட்டணம், மற்றும் வேறு கட்டணங்கள் கிடையாது.

இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்க அனைத்து கிளைகளுக்கும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளைகளை அணுகலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in