Published : 03 Jun 2020 09:23 PM
Last Updated : 03 Jun 2020 09:23 PM
கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் மீனவர்கள் வருவாய் இழந்துள்ள நிலையில் இனி வரும் 45 நாள் மீன்பிடி தடைகாலத்தை ரத்து செய்யவேண்டும் என குமரி மேற்கு கடற்பகுதி மீனவர்கள், 15 நாள் மீன்பிடி அனுமதியை புறக்கணித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமத்தில் கட்டுமரங்கள், பைபர் படகு, மற்றும் நாட்டுப்படகுகள் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கரையோரங்களில் மீன்பிடி பணி நடைபெறுகிறது.
இது தவிர குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலமான ஏப்ரல் 15 முதல் மே 14ம் தேதி வரையிலான காலத்தில் ஊரடங்கால் ஏற்கெனவே தொழிலுக்கு மீனவர்கள் செல்லாத நிலையில் தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி பணியை தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலமாக ஜீன் 1ம் தேதி முதல் ஜீலை 31ம் தேதி வரை மீன்பிடி தடைகாலமாக உள்ளது. தற்போது ஊரடங்கால் 15 நாள் தடைகாலத்தை அரசு தளர்த்தியுள்ளது.
அதன்படி கடந்த 1ம் தேதி முதல் 15 நாட்கள் மேற்கு கடல்பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஜீன் 15ம் தேதியில் இருந்து 45 நாள்கள் தடைக்காலம் அமல்படுத்தப்படவுள்ளது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படககளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர்.
ஏற்கெனவே ஊரடங்கால் 70 நாட்களுக்கு மேலாக மேற்கு கடல்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் வருவாய் இன்றி தவித்தனர். தற்போது 15 நாள் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீன்பிடி தடைகாலம் போடுவதால் மீனவர்களின் படகு பராமரிப்பு, மற்றும் உபகரண செலவு போன்றவற்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் 1 மாதத்திற்கு மேல் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபடுவதால், அரசு அறிவித்துள்ள 45 நாள் தடைகாலத்தை ரத்து செய்யவேண்டும். அல்லது ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் படகுகளை பழுதுநீக்க படகு ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வீதம் அனைத்து விசைப்படகுகளுக்கும் வட்டி இல்லா கடனை மத்திய மாநில அரசுகள் வழங்கவேண்டும்.
இல்லையெனில் தற்போது அரசு அறிவித்துள்ள 15 நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என இரையுமன்துறை விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுத்துள்ளனர்.
இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் பகுதியில் பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கரையிலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT