Published : 03 Jun 2020 07:47 PM
Last Updated : 03 Jun 2020 07:47 PM

எட்டயபுரம் அருகே தனிமைப்படுத்தப்பட்டவரை அலைக்கழித்த சுகாதார ஆய்வாளர் மீது புகார்

கோவில்பட்டி

எட்டயபுரம் அருகே தனிமைப்படுத்தப்பட்டவரை அலைக்கழித்த சுகாதார ஆய்வாளர் மீது துணை இயக்குநரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது.

எட்டயபுரத்தை சேர்ந்த முத்தரசு மகன் ரூபன் சக்கரவர்த்தி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்கு வேலை பார்த்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் குடும்பத்துடன் கடந்த மாதம் 19-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் வந்தார்.

அவர்களை தூத்துக்குடியில் உள்ள கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு அழைத்துச்சென்று தங்க வைத்த அதிகாரிகள், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்று இல்லையென்று வந்ததால், 22-ம் தேதி வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ரூபன் சக்கரவர்த்தி வீட்டுக்கு வந்தவுடன், அவரது வீட்டுக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி ரூபன் சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி மாரிச்செல்வி, தமிழினிகா ஆகியோரை மீண்டும் பரிசோதனைக்கு வர வேண்டும் என சுகாதார ஆய்வாளர் சாத்தூரப்பன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பரிசோதனைக்கு சென்றபோது, மறு பரிசோதனை என்று எதுவும் கிடையாது என எட்டயபுரம் பாலிடெக்னிக் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை அலைக்கழித்த சுகாதார ஆய்வாளர் சாத்தூரப்பன் மீது கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை முத்தரசு கூறுகையில், "அரசு அறிவித்தபடி எனது மகன், மருமகள், பேத்தி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த 1-ம் தேதி சுகாதார ஆய்வாளர் சாத்தூரப்பன் எனக்கு போன் செய்து, அவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்ததை என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை.

நாளை (2-ம் தேதி) மீண்டும் எட்டயபுரம் பாலிடெக்னிக் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் மறு பரிசோதனை நடத்தப்படும். அதற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கூறினார்.

அதன்படி நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், அங்கிருந்த அலுவலர்கள் மறு பரிசோதனை என்பது கிடையாது என தெரிவித்தனர். அப்போது அங்கு சாத்தூரப்பன், எங்களை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார்.

தூத்துக்குடியில் உள்ள உயர் அதிகாரிகள் எங்களிடம் வழங்கிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் உடனடியாக சாத்தூரப்பனிடம் பேசி எங்களை வீட்டுக்கு அனுப்பும்படி கூறினர். இதையடுத்து நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.

தனிமைப்படுத்தப்பட்ட எனது மகன் குடும்பத்தை அலைக்கழித்ததால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். 22-ம் தேதி எனது மகன் வந்துவிட்டார். தனிமைப்படுத்தப்பட்டது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர் நோட்டீஸ் ஒட்டிவிட்டார்.

9 நாட்களுக்கு பின்னர் வந்து எங்களை அலைக்கழிக்க வேண்டுமென இதனை அவர் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் வழங்கி உள்ளோம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x