Published : 03 Jun 2020 06:16 PM
Last Updated : 03 Jun 2020 06:16 PM

கொடைக்கானல் நகர வீதிகளில் உலாவந்த காட்டு மாடுகள் கூட்டம்: அச்சமடைந்து மக்கள் ஓட்டம்

கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் வலம் வந்த காட்டுமாடுகள் கூட்டம்.

கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் நிலவும் நிலையில்,வனப்பகுதிக்குள் இருந்து காட்டுமாடுகள் நகரவீதிகளில் கூட்டமாக உலாவந்ததை கண்டஉள்ளூர் மக்களை அச்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மார்ச் கடைசி வாரம் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னரே சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களுக்கு மேலாக இன்று வரை சுற்றுலாபயணிகள் வருகை இல்லை.

இதனால் சுற்றுலாத்தலங்களில் அமைதியான சூழல் நிலவிவருகிறது. ஆட்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இல்லாததால் வனவிலங்குகள், பறவைகள் நகர்பகுதிக்குள் வந்து செல்கின்றன.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வலம் வந்த காட்டுமாடுகள் கூட்டம்.

வழக்கமான நாட்களில் எப்போதாவது வழிதவறி காட்டுமாடுகள் நகர்பகுதிக்குள் வருவது வழக்கம். இவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிடுவர். இந்நிலையில் இன்று கொடைக்கானல் நகரின் மையப்பகுதியான அண்ணா சாலை, மூஞ்சிக்கல் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் ஒரு குழுவாக நகருக்குள் வலம் வந்தன. குட்டிகளுடன் வந்த காட்டுமாடுகள் இங்கு அங்கும் அலைபாய்ந்து ஓடின.

இவற்றைக் கண்ட மக்கள் அலறியடித்துஓடினர். பின்னர் தொலைவில் நின்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்காட்டினர். தகவலறிந்த வனத்துறையினர் காட்டுமாடுகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். நகருக்குள் பல முக்கிய சாலைகள் வழியாக இவை வலம்வந்தன.

இதனால் காட்டுமாடுகள் செல்லும் வழிகள் குறித்து மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். ஒரு வழியாக காட்டுமாடுகள் கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அனுப்பியதையடுத்து மக்கள் நிம்மதியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x