Published : 03 Jun 2020 05:03 PM
Last Updated : 03 Jun 2020 05:03 PM
கோவையில் நகை மோசடி வழக்கில் பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் சுவப்பன சுஜா (40). இவர், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக பணியாற்றி வருகிறார். நீதிமன்றம் தொடர்பான பணிகளை இவர் கவனித்து வந்தார்.
இவர், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் நகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது இல்லை, உரியவர்களிடமும் ஒப்படைப்பதில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மொத்தம் 11 வழக்குகளில் தொடர்புடைய 60 பவுன் நகையை பெண் காவலர் சுவப்பன சுஜா நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தன் வசம் வைத்துக் கொண்டு, ஒப்படைக்க காலம் தாழ்த்தி வந்தார்.
இதுதொடர்பாக, அந்த காவல் நிலையத்துக்குட்பட்ட அதிகாரிகள் கேட்கும்போது, உயர் அதிகாரிகளின் பெயரை கூறி அவர் நழுவி வந்துள்ளார். இந்நிலையில், தற்போதைய சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் இந்த விவகாரம் தொடர்பாக பெண் காவலர் சுவப்பன சுஜாவிடம் விசாரணை செய்து, உரிய விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், சுவப்பன சுஜா எந்த பதிலும் அளிக்காமல் நீண்ட விடுமுறையில் சென்று விட்டார். இதுதொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, பெண் காவலர் சுவப்பன சுஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காவல் ஆணையர் முன்னிலையில் சரண் அடைந்து உத்தரவை நீக்கிக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. அதையும் அவர் பின்பற்றவில்லை.
இந்நிலையில், பெண் காவலர் சுவப்பன சுஜா மீீது நகைகளை ஒப்படைக்காத விவகாரம் தொடர்பாக, சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) சங்கீதா மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் 409, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சுவப்பன சுஜாவை காவல்துறையினர் நேற்று (ஜூன் 2 இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, பெண் காவலர் சுவப்பன சுஜா கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 80-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து விசாரணைக்கு ஆஜர்ப்படுத்தியுள்ளார் என நீதிபதியால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT