Published : 03 Jun 2020 05:04 PM
Last Updated : 03 Jun 2020 05:04 PM

தேசிய கால்நடை அடையாளம் காணும் திட்டத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் தரவுகள் சேகரிப்பு: காது வில்லை அணிவித்து தடுப்பூசியும் போடப்படுகிறது 

மதுரை

தமிழகத்தில் தேசிய கால்நடை அடையாளம் காணும் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்த இனங்களை அழியாமல் பாதுகாக்க, 3 வயதிற்கு மேலான காளைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது.

நாடு முழுவதும் கால்நடைகள் எண்ணிக்கை, அவற்றின் இனங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவற்றை பாதுகாக்க தேசிய கால்நடை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தத் திட்டம் ‘கரோனா’ தொடங்குவதற்கு முன் தொடங்கி நடந்தது. இதில், தமிழகத்தில் 3 ½ கோடி கால்நடைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பிறந்த கன்றுக் குட்டிகள் முதல் பெரிய கால்நடைகள் வரை 2 லட்சத்து 75 ஆயிரம் கால்நடைகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டது.

அதன்பிறகு ‘கரோனா’ ஊரடங்கால் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் மீ்ண்டும் தொடங்கிய இந்தத் திட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் விவரங்களும் சேகரித்து ஒவ்வொன்றிற்கும் காதுவில்லை மாட்டி தடுப்பூசி போடப்படப்படுகிறது.

தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் வீரத்திற்கும், பாய்ச்சலுக்கும் புகழ் பெற்ற புலிகுளம், காங்கேயம் மற்றும் உம்பளச்சேரி காளைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர சொற்ப அளவில் தேனி மலை மாடு, வத்ராயிருப்பு மாடு மற்றும் வரையறுக்கப்படாத காளையினங்கள் ஜல்லிக்கட்டுப்ப் போட்டிக்கு தயார்ப்படுத்தப்படுகின்றன. இது குறித்து மதுரை மண்டல இணை இயக்குநர் மருத்துவ சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக அலங்கநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தேசிய கால்நடை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 3 மாத வயதுக்கு மேலான தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாட்டினங்களும், தனித்துவமான எண் கொண்ட பிளாஸ்டிக் காது வில்லை மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து கால்நடைகளின் மற்றும் உரிமையாளர்களின் தகவல்கள் நாடு தழுவிய 'கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார தகவல் வலையமைப்பு' (INAPH) தரவுத்தளத்தில் உள்ளிடப்படும்.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளோடு பசுக்களும் எருமைகளும் அடையாளப்படுத்தப்பட்டு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வளர்கின்றன. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் அலங்கநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, தேசிய NADCP-FMD திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்படுகின்றன. கால்நடைகளின் தனித்துவமான அடையாள எண், உரிமை, சுகாதாரம் போன்றவை INAPH தரவுத்தளத்தில் முறையாக உள்ளிடப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x