Published : 03 Jun 2020 02:24 PM
Last Updated : 03 Jun 2020 02:24 PM
தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாதென அரசாணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “ கரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24- ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்தது. இதுநாள்வரை, அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது.
கரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29- ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
இதுபற்றி பொதுமக்கள் அறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்லவில்லை. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது, ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீட்டித்து வருகிறது. ஆகவே, மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசுக்கு மே 12- ம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை அதன் மீது அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையைகூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும்.
கரோனா நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு, நிலம், வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் 3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகைதாரர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தினாலோ, அல்லது வாடகை கட்டணம் வசூலித்தாலோ, காலி செய்தாலோ, வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடாக அரசு அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி காலத்தில் எடுக்கப்படும் தற்காலிக, அவசர கால நடவடிக்கைகள் தொடர்பாக சிங்கப்பூர் அரசு கொண்டு வந்த சட்டத்தை மேற்கோள் காட்டி, ஆறு மாத காலத்திற்கு வாடகை வசூல் செய்வதில் இருந்து, வாடகைதாரர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அரசை பொறுத்தமட்டில், 2005- ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, வீட்டின் உரிமையாளர்களுக் கான வாடகை கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது. வாடகை கேட்டு குடியிருப்பு வாசிகளை துன்புறுத்த வேண்டாம்; அந்த கட்டணத்தை அரசே ஈடு செய்யும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசும் ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவுகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளது. இதனால், வாடகை தாரர்களுக்கு எந்த பலனும் இல்லை.
ஊரடங்கால், பொது மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு இல்லாததால் கடந்த இரண்டு மாத காலத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வாடகைக்கு குடியிருக்கும் மக்களால், மாதாந்திர வாடகையை செலுத்த முடியவில்லை.
ஆகவே, பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற மத்திய, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரத்தை வருவாய் மற்றும் காவல்துறை மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும். இரண்டு மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்து வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகை தாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று அனைத்து நில, வீட்டின் உரிமையாளர் களுக்கு உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT