Last Updated : 03 Jun, 2020 11:42 AM

 

Published : 03 Jun 2020 11:42 AM
Last Updated : 03 Jun 2020 11:42 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி: மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

கரோனோ ஊரடங்கு முழுவதுமாக திரும்பப் பெறப்படும்வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்கக் கோரி மாணவர் ஒருவரின் தந்தை தொடர்ந்த வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," எனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளார். தமிழக அரசு ஜூன் 15-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9.4 4 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள நிலையில், 6.3 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பச் சூழலை கொண்டவர்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாக பல்வேறு உளைச்சல்களை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனது மகனும் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுத உள்ள நிலையில் அதனை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.

மேலும் விடுதிகள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் நிலை குறித்து சிந்தித்து, தேர்வு குறித்து முடிவெடுக்க அரசு தவறிவிட்டது. கரோனா நோய்த் தொற்றால் அனைவருமே பொருளாதார, உளவியல் சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் மாணவர்கள் சரியான முறையில் தேர்வு எழுதுவார்களா என்பது கேள்விக்குறியே.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ஜூலை20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்கு முன்பாக அரசு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசி முடிவெடுக்கவில்ல.

ஆகவே தற்போதைய சூழலையும் மாணவர்களின் உளவியல் சூழலையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை கரோனா ஊரடங்கு முழுவதுமாக திரும்பப்பெறப்படும் வரை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என்க் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், சிபிஎஸ்சியை பொறுத்தவரை அவர்கள் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பிரச்சினை உள்ளது. இவை குறித்து அறிந்தே அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கும்.

தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கான மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே அரசின் இந்த முடிவில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x