Last Updated : 25 Sep, 2015 05:27 PM

 

Published : 25 Sep 2015 05:27 PM
Last Updated : 25 Sep 2015 05:27 PM

குமரியில் அருகிவரும் செவ்வாழை சாகுபடி: 500 ஏக்கராக குறைந்துபோன பரிதாபம்

செவ்வாழை பயிரில் நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில், இப்பயிரின் சாகுபடி பரப்பளவு 500 ஏக்கருக்கும் கீழே குறைந்துவிட்டது. செவ்வாழை விவசாயத்தை மேம்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் கைகொடு க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம்தான் முன்னிலையில் உள்ளது. இங்கு நேந்திரன், கதலி உட்பட பலவகை வாழை ரகங்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தாலும், செவ்வாழை 500 ஏக்கருக்கும் குறைவாகவே சாகுபடி செய்யப்படுவதாக முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

குலை ரூ. 1,500 விலை

ஈத்தாமொழி பகுதியில் செவ்வாழை பயிரிட்டுள்ள விவசாயி ராஜேந்திரன் கூறும்போது, “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாழை ரகத்தை பயிரிட்டு வருகிறேன். இது நோய் தாக்கமின்றி வளர்ந்தால் அதிக லாபம் தரும் பயிராகும். ஆனால், பாதிக்கு மேற்பட்ட வாழைகள் விநோத நோய்களால் தாக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. நடும்போதிலிருந்து குலைபோடும் பருவம்வரை பூச்சி, நோய் தடுப்பு முறையை கவனமாக கையாண்டாலும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.”என்றார்.

நோய் தடுப்பு முறைகள்

திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மையம் சிறப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு செவ் வாழை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’ செய்தி யாளரிடம் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய பூச்சியியல் ஆராய்ச்சி பேராசிரியர் இருளாண்டி கூறும்போது,

“சிவப்பு வாழை கிழங்குகளில் அதிகமான கிழங்கு கூன்வண்டுகள் தாக்குவதால் சிறு கன்றாக இருக்கும்போதே இவ்வாழைகளை மீட்டெடுக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

வாழைத் தோட்டத்தில் ஏற்கெ னவே இருக்கும் செவ்வாழை கிழங்குகளில் கூன்வண்டுகள் ஏராளம் பரவுகிறது. எனவே அவற்றில் சுண்ணாம்பு பொடி, மோனோகுரோட்டம்பாஸ் போன்ற மருந்துகளை அடித்து பூச்சிகட்டுப்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் சிவப்பு கன்றுகளில் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாழையில் மோனோகுரோட்டம்பாஸ் போன்ற பூச்சிகொல்லி மருந்தில் வாழைக்கிழங்கை 15 நிமிடம் மூழ்கவைத்து பின்னர் நடவேண்டும். வாழைக்கன்று ஒன்றுக்கு 40 கிராம் பிரிடான் பூச்சி மருந்தை போட்டு தண்ணீர் விடவேண்டும்.

இதேபோல் 3 மாத பயிரில் இவ்வாழைகளில் கண்ணுக்கு தெரியாத தண்டு கூன்வண்டு அதிகமாக காணப்படும்.

இதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் பூச்சி மருந்துகளை 4 மில்லி என்ற அளவில் ஊசிமூலம் வாழை தண்டுகளில் செலுத்தவேண்டும். இதேபோல் மாதம் ஒருமுறை செவ்வாழைக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x