Published : 02 Jun 2020 12:43 PM
Last Updated : 02 Jun 2020 12:43 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட பட தயாரிப்புகளுக்கு தடைகோரும் வழக்கை அவசரமாக விசாரிக்க ஜெ.தீபா கோரியதை அவசியமில்லை என பட நிறுவன வாதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றனர்.
தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .
ஏற்கனவே இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் தீபா, அவர் உயிருடன் இருந்தபோது தன்னால் சந்திக்க முடியவில்லை என பலமுறை கூறியிருந்ததையும்,
தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எந்த உரிமையும் இல்லாமல், உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கௌதம் மேனனின் குயின் இணையதளத்தில் வெளியாகிவிட்டதால் இந்த வழக்கை அவரசமாக விசாரிக்க தீபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது தலைவி படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில், கொரோனா ஊரடங்கு, காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதமாக படப்பிடிப்பை நிறுத்தப்பட்டுள்ளதால், மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT