Published : 02 Jun 2020 06:22 AM
Last Updated : 02 Jun 2020 06:22 AM
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவி வரும் நிலையில், கோவையில் மனைவியின் நகைகளை விற்று, ஏழைத்தொழிலாளர்களின் பசியாற்றியுள்ளார் ஜெ.முகமது ரஃபி (45).
கோவை சாய்பாபா காலனியில் வடமாநிலத் தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முகமது ரஃபி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
இதுகுறித்து முகமது ரஃபி கூறியதாவது:
அப்பா மெக்கானிக்காகப் பணிபுரிந்தார். பெரிய குடும்பம். சிறு வயதிலேயே பசியின் கொடுமை தெரியும். கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, கோவையில் பணிபுரியும் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு வழியின்றித் தவிக்கும் சூழல் உருவானது. இதனால், கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கத் தொடங்கினோம். ஒவ்வொரு வேளையும் 1,000, 1,500-க்கு மேல் உணவு வழங்கினோம். எனது சேமிப்பில் இருந்த ரூ.7 லட்சம் செலவழிந்த போது, தனது 100 பவுன் நகைகளைக் கொடுத்து, அதைவிற்று ஏழைகளுக்கு உணவளிக்க உதவினார் மனைவி பாத்திமா.
ஏறத்தாழ 80,000 பேருக்கு மேல் உணவு வழங்கியதுடன், 7,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், கோதுமை மாவு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினோம். மதிய உணவுடன் முட்டையும் சேர்த்து கொடுத்தோம். மேலும், 3,000 பேருக்கு முகக் கவசங்களை வழங்கினோம். மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். இதுவரை ரூ.40 லட்சத்துக்குமேல் செலவழித்துள்ளோம். இவ்வாறு முகமது ரஃபி கூறினார்.
அவரது மனைவி பாத்திமாவிடம் பேசியபோது, “பெட்டியில் பூட்டிவைப்பதைவிட, மக்களின் பசியாற்ற எனது நகைகள் உதவியது பெரும் மகிழ்ச்சியே அளிக்கிறது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை இறைவன் பார்த்துக் கொள்வார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT