Published : 01 Jun 2020 09:31 PM
Last Updated : 01 Jun 2020 09:31 PM
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் செயல்பாடு தடைபடா வண்ணம் இணைய வழி (ஆன்லைன்) மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக தனியார் பங்களிப்புடன் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5000 ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டதாக ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் பல்வேறு செயல்பாடுகள் மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தடுப்பிற்காக தமிழக அரசின் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் மாணவ/மாணவியர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை உள்ளது. 2020-21 கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 9-ம் வகுப்பு மாணவ/மாணவியர்களின் கற்றல் செயல்பாடு தடைபடா வண்ணம் இணைய வழி (ஆன்லைன்) மூலம் பயிற்சி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை தீர்மானித்தது.
அதனை செயல்படுத்தும் விதமாக, தொண்டு நிறுவனத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) அவர்களின் மூலம் 4,890 கைபேசி வழங்கப்பட்டது. இக்கைபேசிகள் 1 முதல் 10 வரை உள்ள உதவி கல்வி அலுவலர்கள் வாயிலாக, அவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ/மாணவியர்களுக்கு அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் கைபேசி வழங்கப்பட்டது.
கைபேசியுடன் பயன்படுத்தும் விதம் அதனை பெற்றோரின் மேற்பார்வையில் கையாளும் விதம் பற்றிய அனைத்து அறிவுரைகளும் அளிக்கப்பட்டது. இணையவழி மூலம் அந்த மாதத்திற்குரிய பாடங்களை படிக்க ஏதுவாக அமைந்துள்ளதால் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இச்செயல்பாடுகளின் தொடர்ச்சியாக மாணவ மாணவியர்களின் நலன் கருதி கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறும் வண்ணம் ஜூன் மாதம் 2020ல் 1-ம் தேதி முதல் 2020-21-ம் கல்வியாண்டில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக பாடவாரியாக கால அட்டவணை தயார் செய்து, ஒவ்வொரு நாளும் அப்பள்ளியில் பாடம் போதிக்கும் ஆசிரியரைக் கொண்டு, பாட ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ற செயலியை பயன்படுத்தி முதற்கட்டமாக 1 மாதத்திற்கான பாடத்திட்டத்தை தலைமையாசிரியரின் வாயிலாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் நாள் வாரியாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட பாடத்திட்டத்தினை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் கல்வித்துறையின் உதவிக் கல்வி அலுவலர் வாயிலாக தினமும் மேற்பார்வையிடப்படுகிறது. 12ஆம் வகுப்பு பயிலும் 5,220 மாணவ/மாணவியர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினியைக் கொண்டு கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் சிறப்பாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பயிலும் 5,000 மாணவ/மாணவியர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறையால் ஸ்மார்ட் போன்கள் (Smart Phones) இலவசமாக வழங்கப்பட்டு, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் 2019-20 கல்வியாண்டில் பயின்று கொண்டிருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் வருகின்ற பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு சில வழிமுறைகளை அறிந்து கொள்ள 3,500 மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையால் இணையதள இணைப்பு இலவசமாக அவரவர் பயன்படுத்தும் சேவை வழங்குநர் (Service Provider) ஏற்ப வசதி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT