Published : 01 Jun 2020 07:26 PM
Last Updated : 01 Jun 2020 07:26 PM
பொதுமுடக்கக் காலத்தில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் அதற்கான செலவினங்களுக்காக மொத்தம் 86.19 லட்ச ரூபாயை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:
“ஏழை, எளிய மக்களின் அட்சயப் பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களில், காலை, மதியம் மற்றும் இரவு என்று மூன்று வேளைகளிலும் உணவு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழை எளியோர்களின் பசியாற்றுவதில் அம்மா உணவகம் மிகச் சிறந்த பங்காற்றி வருகிறது. நாளுக்கு நாள் வரும் பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் உணவு வழங்க ஏதுவாக, உணவின் அளவினை உயர்த்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப கோவை மாவட்டத்தின் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களுக்கும், நகராட்சிகளில் உள்ள 3 அம்மா உணவகங்களுக்கும் தலா 2 லட்ச ரூபாய் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் 7,96,826 நபர்கள் 41.38 லட்ச ரூபாய் மதிப்பில், உணவு உண்டு பயனடைந்துள்ளனர். மேலும், 7.82 லட்ச ரூபாய் மதிப்பில் முட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மே 31 வரை பொள்ளாச்சியில் 64,014 நபர்களுக்கு 3.67 லட்ச ரூபாய் மதிப்பிலும், மேட்டுப்பாளையத்தில் 37,300 நபர்களுக்கு 2.62 லட்ச ரூபாய் மதிப்பிலும், வால்பாறையில் 85,094 நபர்களுக்கு 5.68 லட்ச ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் 1,86,408 நபர்களுக்கு 11.98 லட்ச ரூபாய் செலவில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான மொத்தச் செலவினத் தொகையாக 61.19 லட்ச ரூபாயும், பொதுமுடக்கம் முடியும் வரை கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கான செலவினத்திற்கு முன்பணமாக தோராயமாக 25 லட்ச ரூபாயும் சேர்த்து மொத்தம் 86.19 லட்ச ரூபாய் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் உணவருந்தும் அனைவருக்கும், பொதுமுடக்கம் முடியும் வரை உணவிற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கான செலவினத் தொகை, அதிமுக கோவை மாநகர், புறநகர் மாவட்டங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
ஆட்சியரிடம் அமைச்சர் நிதி வழங்கியபோது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, முன்னாள் எம்.பி., ஏ.கே.செல்வராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT