Published : 01 Jun 2020 05:28 PM
Last Updated : 01 Jun 2020 05:28 PM

கரோனா பாதித்த மக்களைக் காக்கும் கடமையைக் கைகழுவும் அரசு: முத்தரசன் கண்டனம் 

கரோனா பாதித்த மக்களைக் கூடுதல் பரிசோதனை செய்யாமல் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மருத்துவ அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்கிற தகவல் வெளியாகிறது, அரசு கரோனா பாதித்த மக்களைக் காக்கும் கடமையை சோப்பு போட்டுக் கை கழுவும் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கடந்த மார்ச் முதல் வாரத்தில், தமிழ்நாட்டில் தாக்குதலைத் தொடங்கிய புதுவகை கரோனா நோய் பெருந்தொற்று பரவலைத் தடுக்க நாடு முடக்கம், ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டன. முதல் கட்டமாக 21 நாள் என அறிவித்து, நான்கு கட்டங்களாக தொடர்ந்து, இப்போது ஜந்தாவது கட்டமாக இம்மாதம் இறுதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படியான உத்தரவு ஜூன் 30 வரை நீடிக்கும் என அறிவித்த அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் கரோனா நோய் பெருந்தொற்று தாக்குதலால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னை மருத்துவமனைகள் கரோனா நோய் பெருந்தொற்று பாதித்த நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

அரசு மருத்துவமனைக்கு வரும் கோவிட்-19 நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு திருப்பி விடப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பன்மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நோயாளிகளிடம் இயன்ற வரை பணம் கறந்து வரும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பணம் கட்டி சிகிச்சை பெறும் வாழ்க்கை நிலை இல்லாத, வறுமையில் வாழும் ஏழை மக்கள் ‘சாவு’ வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு நெட்டித் தள்ளப்படுகின்றனர். இதனால் கரோனா நோய் பெருந்தொற்று பாதிப்பு குறித்து உண்மை நிலவரங்களை மூடி மறைக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பில் நடைபெறுகின்றன.

சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் கரோனா நோய் பெருந்தொற்று பிரிவில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, ஓமந்தூரார் உயர்தனி சிறப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த யுனானி மருத்துவர் அப்பிராஸ் பாஷா ஆகியோர் மரணங்களில் கரோனா நோய்த் தொற்று மூடிமறைக்கப்படுவதாக ஆழ்ந்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு மருத்துவப் பணியில் ஈடுபட்டு இருந்த இவர்களுக்கு அரசு அறிவித்த மருத்துவக் காப்பீட்டுத் தொகையும், அரசுப் பணியும் வழங்க மறுப்பது அரசின் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.

சென்னை பெருநகரிலும், அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்து தொடர் பரிசோதனை செய்ய வேண்டாம், சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிய வேண்டும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மருத்துவ அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கரோனா நோய் பெருந்தொற்று தடுப்புக்கு அடிக்கடி சோப்புப் போட்டு கை கழுவ வேண்டும் என்று அறிவுரை வழங்கி வந்த மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்து, பரிபூரண குணப்படுத்தவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அரசின் கடமைப் பொறுப்புகளை ‘சோப்பு போட்டு கை கழுவி வருவதை’ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும் வரையில் கோவிட்-19 நோய் பாதித்த நோயாளிகளுக்குத் தேவையான மருந்துவ சிகிச்சை அளிக்க மாநில அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x