Published : 01 Jun 2020 04:58 PM
Last Updated : 01 Jun 2020 04:58 PM
காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளது என்று பார் கவுன்சிலும் மெட்ராஸ் பார் அசோசியேஷனும் தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டுமெனவும் அவை வலியுறுத்தியுள்ளன.
கரோனா தொற்று காரணமாக தமிழக நீதிமன்றங்களில் தனிமனித இடைவெளியைப் பராமரிக்கவும், தொற்று பரவாமல் இருக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு காணொலிக் காட்சி மூலம் நீதிபதிகள் வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் நாடெங்கும் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில வகையினங்கள் தவிர பெரும்பாலானவற்றுக்குத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட 9 நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்றும் மற்ற நீதிமன்றங்களில் காணொலி மூலமாக வழக்கு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றங்களை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. வழக்கமான நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், மெட்ராஸ் பார் அசோசியேஷனும் வேண்டுகோள் வைத்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வழக்கறிஞர் சங்கங்களுடன் காணொலி மூலமான ஆலோசனைக் கூட்டத்தை பார் கவுன்சில் இன்று நடத்தியது. அந்தக் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், சென்னையில் உள்ள சங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமான விசாரணையின் பாதகங்கள் குறித்தும், அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க அனுமதி வேண்டுமெனவும் தலைமை நீதிபதியையும், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவையும் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அளித்த பேட்டி:
“காணொலிக் காட்சி மூலம் முழுமையான விசாரணை என்பது உகந்ததாக இல்லை. காணொலிக் காட்சி மூலம் நடக்கும் விசாரணை ஒட்டுமொத்தமாகத் தோல்வி அடைந்துள்ளது என பெரும்பாலான சங்கங்கள் தெரிவித்துள்ளன. 2% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 33 நீதிமன்றங்களில் காணொலி மூலம் விசாரணை தேவையில்லை என தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக் குழுவுக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும்”.
இவ்வாறு அமல்ராஜ் தெரிவித்தார்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் ஒன்பது மாவட்ட நீதிமன்றங்கள் போல அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழக்குகளை நடத்த அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT