Published : 01 Jun 2020 04:43 PM
Last Updated : 01 Jun 2020 04:43 PM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மேற்குவங்கத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள ஒரு தொழில் நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்படும் பொருட்காட்சிகளில் ராட்டினங்களை இயக்கும் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளிகள் வேலை செய்து வருகிறனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் மற்றும் கோடை விடுமுறையில் பொழுது போக்கிற்காக பட்டத்தரசியம்மன் கோயில் அருகே கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில் ராட்டினங்களை இயக்க மேற்குவங்க மாநிலம் புர்பா பாரதாமன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜூட் என்ற சர்மா (36), சஞ்சைசிங் (40), ரஞ்சன் சர்மா (22), கிஷான் படயாகர் (21), சந்தோஷ்கார்கி (30), பைஜாய் கௌசாமி (29), சேகா சமிர் பால்வான் (19), ராகுல் பயூர் (18), ராஜூதீபோநாத் (22), பபி அன்குரி (22) ஆகியோர் வேலைக்காக வந்துள்ளனர்.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. விரைவில் தேசிய ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொழிலாளிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே இருந்து வந்தனர். மேலும், தங்களது சொந்த மாநிலத்திற்கு ரயிலில் செல்வதற்காக ஏப்ரல் மாதம் உரிய முறையில் விண்ணப்பித்துள்ளார்கள்.
ஆனால் இவர்களை சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. தொடர்ந்து பல முறை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகரில் வருவாய்த் துறையினரை அணுகியும் அவர்கள் உரிய பதில் கூறவில்லையாம்.
வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு இப் பகுதியில் உள்ளவர்கள் அரிசி, கோதுமை மாவு, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள். இவர்களை ஒப்பந்த முறையில் அழைத்து வந்தவர்கள் தரப்பில் நாளொன்றுக்கு பாதி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பெய்யும் மழைக்கு இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தில் படுத்துள்ளார்கள். இதன் அருகே ஒரு டென்ட் அமைத்து அதில் சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களும், இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT