Published : 01 Jun 2020 04:00 PM
Last Updated : 01 Jun 2020 04:00 PM
பொதுமக்கள் அரசு அலுவலரை அலுவலகத்தில் சந்திப்பதே குதிரைக் கொம்பாக உள்ள இந்தக் காலத்தில், குடியிருக்கும் வீட்டிலும்கூட எப்போது வேண்டுமானாலும் தன்னைச் சந்திக்கலாம் என வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் செயல் அலுவலர் கு.குகன் அறிவித்து, அதன்படி செயல்பட்டும் வருகிறார்.
பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வழங்குவது வரை மட்டுமல்லாது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, நகரின் தூய்மை , தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள்தான். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்கள் அடிப்படை வசதி தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிகாரிகளையே நேரடியாக நாடவேண்டியுள்ளது.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவராக மூன்று மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற கு.குகன் தன்னை நாடிவரும் பொதுமக்கள் தொடர்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் ஒன்று, பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர சோபாக்கள் போடப்பட்டது.
பொதுவாக அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்றால் உட்கார இடம்கூட இருக்காது. கால் உடைந்த பெஞ்ச், நாற்காலிகள்தான் இருக்கும். சில அலுவலகங்களில் உட்காரச் சொல்லவும் அதிகாரிகள் மனசு வைக்க மாட்டார்கள். ஆனால், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க வரும் பொது மக்கள் அமர, தனியார் நிறுவன வாடிக்கையாளர்கள் வரவேற்பறை போல சோபாக்கள் போட்டு பிரமிக்க வைத்துள்ளார் குகன்.
அடுத்ததாக அவர் செய்துள்ளது காலத்துக்கு ஏற்ற மாற்றம். பொது மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க நேரடியாக வரவேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்காக ‘ஹலோ பேரூராட்சி’ என்ற வாட்ஸப் குழு இருக்கிறது. அதில் பொதுமக்கள் பேரூராட்சி சேவைகளான குடிநீர், தெரு விளக்குக் குறைபாடுகள் தொடர்பான புகார்களைப் பதிவிட்டாலே போதும். கால்கடுக்க நடந்து வரவேண்டாம், கால் பக்க, அரைபக்க மனுவும் வேண்டாம். வாட்ஸப்பில் சொன்னாலே வேலை நடந்துவிடும்.
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஒருமணி நேரம் முதல் இரண்டு நாட்களுக்குள் சரி செய்யப்படுகிறது. செய்தபின் அது வாட்ஸப்பில் பகிரப்படுகிறது. அடுத்ததாக மக்கள் தன்னைச் சந்திக்க நேரம் காலம் எதற்கு என்று யோசித்த குகன், தான் குடியிருக்கும் இடத்திலேயே தன்னைச் சந்திக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
வைத்தீஸ்வரன் கோயில் , வடக்கு மாட வளாகத்தில் தனியார் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகைக்குக் குடியிருக்கும் குகன், அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க முடியாத பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து சந்திக்கலாம் என குடியிருப்பு வளாகத்தில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்.
பேரூராட்சிக்கு என தனி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு அதன் மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கரோனா பொதுமுடக்க காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் சோர்ந்து விடாமல் இருக்க ஆரோக்கிய சமையல் போட்டி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் போட்டி, என முகநூல் வழியே போட்டிகள் வைத்து அதில் சிறந்தவற்றுக்குப் பரிசுகள் அளித்து ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றி இருக்கிறார் குகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT