Published : 31 May 2020 04:24 PM
Last Updated : 31 May 2020 04:24 PM
பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
கரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு குறித்து ஆய்வு செய்து பதினைந்து நாட்களுக்குள் அறிக்கை அளித்திட தமிழக அரசு மே 12 வெளியிடப்பட்ட அரசாணை மூலம் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை (Expert Group) அமைத்தது. சுகாதாரப் பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வி செயல்பாடு பற்றி அறிக்கை அளிப்பதே இக்குழுவின் நோக்கம்.
தற்போது மே 29 வெளியிடப்பட்ட அரசாணைக் குழுவில் இன்னும் சிலரை சேர்த்து விரிவுபடுத்தி, அறிக்கை அளித்திட மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பிரதிநிதியோ, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதியோ இக்குழுவில் இடம் பெறவில்லை. மாறாக தனியார் பள்ளி நிர்வாகத் தலைவர்கள், தனியார் கன்சல்டன்சி நடத்துபவர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் உட்பட மத்திய பாடத்திட்ட பள்ளி நிர்வாகிகள் விரிவு படுத்தப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளின் நலன் சார்ந்த செயல்பாடு ஆகாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மலை கிராம பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், பல்வேறு வகையான வாழ்வியல் சூழலில் இருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், இம்மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், வீடுகளிலும் எந்த அளவு தொழில்நுட்பம் பயன்படுத்த இயலும், பாட வேளை மாற்றம், பாட அளவு குறைத்தல் ஆகியவை இம்மாணவர்களை பாதிக்காமல் எவ்வாறு மாற்றங்களை உருவாக்க முடியும் என்பன போன்ற ஆலோசனைகளை களத்தில் நின்று பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களாலேயே முழுமையாகவும், சரியாகவும் வழங்கிட இயலும்.
அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள், அனுபவம் வாய்ந்த துணை வேந்தர் நிலையில் இருந்து பள்ளிக் கல்வி செயல்பாட்டில் பங்களிப்பு செய்த மூத்த கல்வியாளர்கள் யாரும் குழுவில் இடம் பெறாதது தமிழ் நாட்டின் கல்வியியல் மேம்பாட்டிற்கோ, குழந்தைகளின் நலனுக்கோ நிச்சயம் பயன் தராது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளும் குழு ஒரு வாரத்திற்குள் அவசரமாக அறிக்கை தர வற்புறுத்துவது நியாயமாகாது.
அரசுப் பணியில் உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர் பிரதிநிதிகள், மூத்த கல்வியாளர்கள் ஆகியோரை இக்குழுவில் இணைத்து கல்வியியல் அமைப்புகள், ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகியோருடன் விரிவான கருத்துக் கேட்பு நடத்தி, அதில் கிடைக்கப் பெறும் நல்ல ஆலோசனைகளை பரிசீலித்து, அதனடிப்படையில் அறிக்கையை இக்குழு தயாரிக்க வேண்டும்.
அதற்குரிய கால அவகாசம் இக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment