Published : 31 May 2020 03:11 PM
Last Updated : 31 May 2020 03:11 PM

மகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய மனிதநேயத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு: மதுரை சலூன்கடைக்காரர் குடும்பம் நெகிழ்ச்சி

மதுரை

தன்னுடைய மகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மதுரை சலூன்கடைக்காரரின் மனிதநேயத்தை பிரதமர் மோடி பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி‘‘கரோனா ஊரடங்கால் மோசமான சூழலால் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வலி, வேதனைகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த சூழலிலும் மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் தனது மகளின் கல்விக்காக ரூ.5 லட்சம் பணம் சேமித்து வைத்திருந்தார்.

இதனை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டுள்ளார். மகள் எதிர்காலத்திற்காக சேமித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்த அவருக்கு எனது பாராட்டுக்கள், ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமர் தனது பெயரைக் குறிப்பிட்டு தனது சேவையை பாராட்டியதால் மதுரை சலூன் கடைக்காரரும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் குதூகலமடைந்துள்ளனர்.

பிரதமரின் இந்தப் பாராட்டு இதுபோல் மேலும் பல உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பாராட்டு பற்றி சலூன்கடைக்காரர் மோகன் கூறுகையில்,

‘‘நான் சாதாரண சலூன்கடை வைத்திருக்கும் சாமானியன். எனது இந்த சிறிய சேவையை கவனித்து நாட்டின் பிரதமரே பாராட்டியது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

அனைத்து அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்களும் நேரிலும், தொலைபேசியும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவ்வுளவு பெரிய பாராட்டும், பெருமையும் கிடைக்கும் என அந்த உதவியை செய்தபோது எதிர்பார்க்கவே இல்லை.

என் கடைக்கு வருகிற மக்கள் மிகச் சாதாரண அடித்தட்டு மக்கள். அவர்கள் ஊரடங்கால் வேலைக்கு போக முடியாமல் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டனர். அதைப்பார்த்து என் மகள், அவள் படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து உதவி செய்யுங்கள், படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். நானும், என் மனைவியும் தயங்கினோம். அவள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்தாள்.

ஒரு சின்னப் பெண்ணுக்கு இருக்கிற மனிதநேயம் எங்கள் மனதை கரைத்தது. உடனே நாங்கள் அந்தப் பணத்தை எடுத்து வந்து மகள் விருப்பப்படியே அந்த கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவினோம். பிரதமரின் இந்தப் பாராட்டு நியாயப்படி என் மகளைதான் சாரும்.

இந்த சாமாணியன் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டிற்திற்காக பிரதமர் மோடிக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்திற்கும், மதுரை மண்ணுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

கஷ்டப்டுகிற மக்களுக்கு இதுபோல் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய என் மகள் நேத்ரா ஐஏஎஸ் படித்து கலெக்டராக ஆசைப்படுகிறார். அவள் ஆசைப்படி படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு அவளை எப்படியாக பிரதமரிடம் அழைத்துச் சென்று அவரிடம் அவள் ஆசி பெற என்று ஆசை. அது நடக்குமா? என்று தெரியவில்லை, ’’ என்றார்.

நேத்ரா கூறுகையில், ‘‘அப்பா ஒரளவு சம்பாதித்த பணத்தில் எங்களுக்கு சாப்பாட்டிற்கு கஷ்டமில்லை. ஆனால், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் வீடு தேடி வந்து சாப்பாட்டிற்கே வழியில்லை என்று வாய்விட்டு சொன்னார்கள். அப்பாவிடம் அவங்களுக்கு முடிந்தளவு உதவியை செய்யுங்கள் என்றேன்.

மிகச் சாதாரணமாக அந்த உதவியை செய்தோம். ஆனால், நாங்கள் செய்த இந்த உதவியால் கிடைத்த பாராட்டுகளை பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது, ’’ என்றார்.

கடந்த 2 ஆண்டிற்கு முன் இதே ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுயமாக தொழில் செய்து முன்னேற்றமடைந்ததை பாராட்டியதோடு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பூமி பூஜை விழாவுக்கு வந்தபோது அந்தப் பெண்ணை நேரடியாக அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதபோல், பிரதமர் மோடி தமிழகம் வந்தால் சலூன்கடைக்காரரையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்துப் பாராட்ட வாய்ப்புள்ளது.

குறிப்பு:

மதுரை சலூன் கடைக்காரரின் மனிதநேயம் பற்றிய செய்தி முதன்முதலில் இந்து தமிழ் ஆன்லைனில் தான் பதிவு செய்யப்பட்டது. அந்த செய்திக்கான லின்க்: வறுமையில் தவித்த வாடிக்கையாளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள்: மகள் படிப்பிற்கு சேமித்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தில் உதவிய சலூன் கடைக்காரர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x