Published : 31 May 2020 02:56 PM
Last Updated : 31 May 2020 02:56 PM
இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 2,100 பேர் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதில் முதல் கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 700 பேருடன் நாளை மறுநாள் (ஜூன் 2) காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேருகிறது.
கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாய் நாட்டுக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.
இதன் ஒரு பகுதியான 'சமூத்திர சேது' என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' என்ற கப்பல் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடுகிறது. இதில் இலங்கையில் இருந்து 700 இந்தியர்களுடன் முதல் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தில் இருந்து கிளம்புகிறது.
இந்தக் கப்பல் நாளை மறுநாள் (ஜூன் 2) காலை 8 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கரித்தளத்துக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து அனைவரும் பேருந்துகள் மூலம் பயணிகள் முனையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அங்கு சோதனைகள் முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் துறைமுகத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாலத்தீவு மற்றும் ஈரானில் இருந்தும் இரண்டு கப்பல்களில் இந்தியர்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாலத்தீவில் இருந்து ஜூன் 7-ம் தேதியும், ஈரானில் இருந்து ஜூன் 22-ம் தேதியும் கப்பல் தூத்துக்குடிக்கு வரவுள்ளது.
இந்த இரு நாடுகளில் இருந்தும் தலா 700 பேர் வருகின்றனர். மாலத்தீவு மற்றும் ஈரான் நாடுகளில் இருந்தும் இந்தியர்களை 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் தான் அழைத்து வரவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்து வருவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT