Published : 31 May 2020 02:44 PM
Last Updated : 31 May 2020 02:44 PM
'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று கூறிக்கொண்டு கரோனா காலத்தில் அரசியல் செய்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்' என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், ”திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசுவது அனைத்துமே தீண்டாமை வன்மையுடன்தான் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை கடுமையாக விமர்சிக்கும் நோக்கில் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டிக்கத்தக்கது.
தலைமைச் செயலகத்தில் டி.ஆர்.பாலுவும், தயாநிதிமாறனும் மனு கொடுத்துவிட்டு பேட்டி கொடுக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதும் கண்டிக்கத்தக்கது.
அதிமுக ஆட்சியில் எல்லோரும் சமம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். எனவே, தமிழகத்தில் பிரிவினைவாதம் என்பதே கிடையாது. பாகுபாடுகளை உருவாக்கித் தீண்டாமையை உருவாக்கி அரசியல் செய்யும் கட்சியாகதான் திமுக விளங்குகிறது.
கரோனா பாதிப்பில் திமுக சார்பாக ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டு முதல்வரின் தனிப்பிரிவு மூலம் அனைத்து மனுக்களும் ஆராயப்பட்டன. அதில், சாப்பாட்டுக்கு அரிசி கொடுங்கள் என்றுதான் கேட்கப்பட்டது. மானியம் கொடுங்கள், லோன் கொடுங்கள் என்று எந்த மனுவிலும் குறிப்பிடப்படவில்லை.
திமுகவினர் உண்மையாகவே நல்லவர்களாக இருந்தால் அவர்களிடம் கொடுத்த மனுக்களுக்கு அவர்கள் அரிசி, பருப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு அவர்கள் வாங்கிய மனுவை எங்களிடம் கொடுக்கின்றனர்.
ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிவாரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. சரியான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் இந்த ஆட்சிக்கு நல்ல ஆலோசனைகளை கூறி இருக்க வேண்டும்.
ஸ்டாலின் பேச்சு மக்களிடம் இனி எடுபடாது. பல்வேறு இடங்களில் கள்ளச் சாயார பிரச்சினை ஏற்பட்டதால்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளைப் படிப்படியாக குறைத்து வருகிறது அதிமுக அரசு. தேர்தல் நேரத்தில் ஸ்டாலினை மக்கள் முட்டாளாக்குவார்கள்.
கரோனா காலத்தில் எதற்கெடுத்தாலும் முந்தி முந்தி வந்துகொண்டு வடிவேல் கூறியபோதுபோல், நானும் ரவுடிதான், நானும் நவுடிதான் எனக் கூறிக்கொள்கிறார் ஸ்டாலின். அவரை தலைவராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT