Published : 31 May 2020 12:16 PM
Last Updated : 31 May 2020 12:16 PM
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3.65 லட்ச ரூபாய் மதிப்பிலான சுழல் நிதி, வங்கிக்கடன் மற்றும் கரோனா சிறப்புக் கடன் ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார்.
தீத்திபாளையம் ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழிற்கடனாக 1.20 லட்சம் ரூபாய், 2 நபர்களுக்குத் தனிநபர் கடனாக 10 ஆயிரம் ரூபாய், ஒரு குழுவிற்கு ‘கோவிட்-19’ சிறப்புக் கடனாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
அதேபோல் மாதம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழிற்கடனாக 1.20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் 5 நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. மேலும், மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளி நகரில் உள்ள 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரான எட்டிமடை கே.சண்முகம், தொண்டாமுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வி.மதுமதி விஜயகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் திட்ட இயக்குநர் கு.செல்வராசு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.இரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT