Published : 30 May 2020 07:31 PM
Last Updated : 30 May 2020 07:31 PM

விளாத்திகுளம் அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற பாஜகவினர்: தடுத்து நிறுத்திய போலீஸார்

கோவில்பட்டி

விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் வைப்பாற்று வடிநிலப்பகுதியில் நடைபெறும் ஆற்றுமணல் திருட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி முற்றுகையிட சென்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விளாத்திகுளம் வட்டம் பல்லாகுளம் கிராமத்தில் வைப்பாறு வடிநில பகுதியில் தனிநபர்கள் சிலர் முகாமிட்டு சட்டவிரோமாக குவாரி அமைத்து கடந்த 15 நாட்களாக தினமும் ஆற்றுமணலை அள்ளி 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுநல அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் ஆர். பார்த்தீபன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பல்லாகுளம் வைப்பாற்று படுகையில் நடைபெறும் ஆற்றுமணல் திருட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர்.

தகவலறிந்து விரைந்து வந்த விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீஸார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளைக்கும், பாஜகவினருக்கும் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் வந்து, மண்டல துணை வட்டாட்சியர் ஆரோக்கியசாமியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மனுவில், பல்லாகுளம் கிராமத்தில் வைப்பாறு வடிநிலப்பகுதியில் சிறு கனிமங்கள் விதிக்கு புறம்பாக ஆற்றுமணல் திருட்டு நடைபெறுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சமும், விவசாயம் அடியோடு அழியும் சூழலும் ஏற்படும். மேலும் அப்பகுதியில் மணல் திருட்டுக்கு உடந்தையாக ரவுடிகள் கும்பலாக முகாமிட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே மணல் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாளை (ஜூன் 1-ம் தேதி) பாஜக சார்பில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பேராட்டம் நடத்தப்படும், என தெரிவித்துள்ளனர்.

இதில், பாஜக விளாத்திகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணைத்தலைவர் லிங்கராஜ், இளைஞரணி தலைவர் கண்ணன், மகளிரணி தலைவர் லீலாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்லாகுளம், கீழ்நாட்டுக்குறிச்சி, தாப்பாத்தி, அயன்ராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைப்பாற்று படுகையில் நடைபெறும் ஆற்று மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் காளிதாஸ் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x