Published : 30 May 2020 07:20 PM
Last Updated : 30 May 2020 07:20 PM
தமிழகத்தில் இன்று 938 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று (மே 30) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் இன்று 938 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 856 பேர். 82 பேர் விமானங்கள், ரயில்கள் உள்ளிட்டவை மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களாவர். இன்றுடன் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 605. மொத்தமாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 155.
இன்று பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 39 பேர். இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 233 பேர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 43 மற்றும் தனியார் சார்பாக 29 என 72 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
கரோனா தொற்றிலிருந்து சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 687 பேர். இதுவரை மொத்தமாக 12 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
6,513 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் குறித்த விவரங்கள்:
1. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவருக்கு நேற்று (மே 29) கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் அவர் உயிரிழந்தார். அவருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 69 வயது ஆணுக்கு 26-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று (மே 30) காலை உயிரிழந்தார்.
3. நீரிழிவு உள்ளிட்ட நோய் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 58 வயது ஆணுக்கு 29-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் அன்று மாலை 5.30 மணியளவில் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்டவற்றால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆணுக்கு கடந்த 28-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றைய தினம் மாலை அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. நீரிழிவு உள்ளிட்ட காரணங்களுக்கான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 70 வயது ஆணுக்கு கடந்த 29-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.
6. நுரையீரல் பிரச்சினை காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த 72 வயது ஆணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 29-ம் தேதி அவர் உயிரிழந்தார்
இதன் மூலம் இன்று பதிவான உயிரிழப்புகள் அனைத்தும் சென்னையில் நிகழ்ந்துள்ளது தெரியவருகிறது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT