Published : 30 May 2020 07:32 PM
Last Updated : 30 May 2020 07:32 PM

அரசு மருத்துவமனைகளில் ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மருத்துவர்கள் பணி நியமனம்: மாண்பைக் குறைக்கும் என மருத்துவர்கள் அதிருப்தி

பெருமாள்

40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கரோனா வார்டுகளில் மருத்துவர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இப்படி குறைவான தொகுப்பூதியம் வழங்குவது, அரசு மருத்துவர்களின் மாண்பினைக் குறைப்பதாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகி பெருமாள்பிள்ளை ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். ஏற்கெனவே மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியில் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதி தீவிரமடைந்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கக் கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

இதனால் தற்போது 675 புதிய மருத்துவர்களை, 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இவர்களை 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த முடிவெடுத்து, மருத்துவ தேர்வு வாரியத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாகப் பணியில் சேரவும், 3 மாதத்திற்குப் பின் தேவையிருந்தால், பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ள 675 மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சையளிக்கும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர்.

அனைவரையும் அச்சுறுத்தி வரும் கரோனாவை எதிர்கொள்ள, அரசு புதிதாக மருத்துவர்கள் நியமனம் செய்வதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் ஒப்பந்த அடிப்படையில், குறைவான ஊதியத்தில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்க்கிறோம். ஏற்கெனவே கடந்த ஆண்டு அரசாணை 4 டி 2-வைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் மருத்துவர் பணி இடங்களைக் குறைக்காமல் இருந்திருந்தால், தற்போது இந்த கரோனாவை எதிர்கொள்ள மேலும் உதவிகரமாக இருந்திருக்கும். அதுவும் போராட்டத்தின்போது நாங்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்றான, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் வேண்டும் என்பதன் நியாயமும் இப்போது அரசுக்குப் புரிந்திருக்கும்.

கரோனா தொடங்கியதிலிருந்து முகக்கவசம், கிருமிநாசினி திரவம் உள்பட அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் ஏறிவிட்டது. ஆனால் மருத்துவர்களின் மதிப்பையும், சம்பளத்தையும் மட்டும் அரசு குறைப்பது எப்படி நியாயம்? கரோனா தடுப்புப் பணிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தபோது, எவ்வளவு வேண்டுமானாலும் நிதி ஒதுக்க முதல்வர் தயாராக இருப்பதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்தார். ஆனால், கரோனா நோயாளிகளைக் களத்தில் நின்று காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தைத் தருவதற்கு மட்டும் மனம் இல்லை.

அரசு மருத்துவர்களுக்குத் தொடக்க ஊதியமே 56 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தபோதே, மருத்துவருக்குத் தரக்கூடிய ஊதியமா இது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இப்போது 40 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை கரோனா ஆபத்திற்கிடையே பணி செய்வதற்கு அறிவிப்பது நியாயமா? எனவே, அரசு உடனடியாக ஒப்பந்த நியமனத் திட்டத்தைக் கைவிடுவதோடு, வழக்கமான நடைமுறையின் மூலமாகவே மருத்துவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x