Published : 30 May 2020 05:09 PM
Last Updated : 30 May 2020 05:09 PM

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை நாம் செய்து காட்டி இருக்கிறோம்; திமுகவினர் குறித்து ஸ்டாலின் பெருமிதம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றுக்கு எதிரான போரில், தமிழக மக்கள் ஒற்றுமையே வலிமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) அவர்கள், ட்விட்டரில் வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:

"கடந்த இரண்டு மாத காலமாக கரோனாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு நாட்டை பாதித்து வருகிறது அந்தத் தொற்று.

நோய் பரவாமல் தடுக்க வேண்டுமானால் ஊரடங்குதான் ஒரே வழி என்று அரசாங்கங்கள் சொல்லின. அதை ஏற்று மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருந்தார்கள். இப்படி முடங்கி இருந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி அரசாங்கம் ஏதாவது சிந்தித்ததா என்றால், இல்லை!

கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் இரண்டு மாதம் ஆன இன்றைக்கு வரைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி அரசாங்கம் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை!

முன்னேற்பாடு இல்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பெரும்பான்மையானோரின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளானது. பொருளாதார ரீதியாகச் சொல்ல வேண்டுமானால், அப்பாவி மக்கள் எந்த வழியும் இல்லாமல் ரோட்டுக்கு வந்துவிட்டார்கள்.

'அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்; அரசாங்கம்தானே கவனிக்க வேண்டும்; ஆட்சியாளர்கள்தானே காப்பாற்ற வேண்டும்' என்று திமுக நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அரசாங்கத்துக்கு நாம் வழிகாட்டினோம். என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்ய வேண்டும், மருத்துவ உபகரணங்கள் எந்த அளவு தயாராக இருக்க வேண்டும், மருத்துவர்களுக்குத் தேவையானது என்ன, செவிலியர்களுக்குத் தேவையானது என்ன, காவலர்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டியது என்ன என்று வரிசையாகச் சொன்னோம்.

அதிக அளவில் பரிசோதனையை மேற்கொண்டு, தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து, தொற்றிலிருந்து பிறரைப் பாதுகாக்கவும் எச்சரித்தோம். நாம் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பியும் அரசு கேட்டும் கேட்காதது போல் இருந்துவிட்டது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்களாகத்தான் திமுகவினர் அனைவரையும் கருணாநிதி வளர்த்துள்ளார்; நானும் அப்படித்தான் வளர்ந்துள்ளேன்.

மக்கள் நலன் சார்ந்து கடமையாற்ற உறுதி கொண்ட எங்களால், தமிழக மக்கள் படும் துயரத்தைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எனவே, உடனடியாக முன்வந்து கலைஞர் அரங்கத்தைத் தனி மருத்துவ வார்டுகளாகப் பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு ஒப்புதல் கொடுத்தோம்.

ஊரடங்கினால் முடக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினோம்; மளிகைப் பொருட்கள் கொடுத்தோம்; காய்கறிகள் கொடுத்தோம்; இதனை ஒருமுகப்படுத்துவதற்காகவே 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கினோம்.

இப்பேரிடரிலிருந்து மீண்டெழ, மாநிலம் முழுவதும் பல்வேறு தளத்திலிருந்து மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்தேன்.

உதவி தேவைப்படுபவர்கள் யாரை அணுகுவது என்ற குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தோம். பொதுமக்கள் உதவி கோரும் மையமாகவே எனது அலுவலகம் செயல்பட்டது.

உதவி தேவைப்படுவோர் எதிர்க்கட்சியினராய் இருப்பினும், திமுகவினர் தங்களின் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு, தினசரி எழும் மக்களின் பிரச்சினைகளைச் சரிசெய்து வருகின்றனர். எதிர்க்கட்சி இயக்கிவரும் ஓர் உதவி எண்ணுக்கு, பல லட்சம் அழைப்புகள் வருமெனில் மக்களின் துயரங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?

கடந்த 40 நாட்களில் 18 லட்சம் பேர் எனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். கடந்த பல வாரங்களாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு இத்திட்டத்தின் மூலமாகச் செய்துள்ள உதவிகளைப் பட்டியலிட வேண்டுமானால், பல மணிநேரம் ஆகும்!

உதவி பெற்றவர்கள் கொடுத்து வரும் பேட்டிகளைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது!

உதவி பெற்றவர்கள் பலரை நானே தொடர்புகொண்டு விசாரித்தும் வந்தேன். அவர்கள் அனைவருமே தாங்கள் பெற்ற பயனையும், ஆபத்துக் காலத்தில் திமுக செய்த உதவியையும் மறக்க மாட்டோம் என்று சொன்னார்கள்.

சில தினங்களுக்கு முன் ராணிப்பேட்டையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரிடம் பேசினேன். மாரியம்மாளுக்குப் பார்வைக் கோளாறு உள்ளது. அவரது மகனுக்கும் கண்பார்வை இல்லை. இந்நிலையில் அவர்கள் 50 நாட்களாக ராணிப்பேட்டையில் தனிமையாகச் சிக்கித் தவிக்கின்றனர். மாரியம்மாளின் கணவரும் கண்பார்வை இழந்தவர். அவர் ஒருபக்கம் அரியலூரில் இந்த ஊரடங்கினால் வீடு திரும்ப முடியாது சிக்கித் தவித்தார். தாயும் மகனும் ஒருபக்கமும், கணவர் ஒருபக்கமும் துயரத்தில் இருந்த நிலையில், மாரியம்மாள் 'மக்களின் உதவி எண்ணை' அழைத்து தன் நிலைமையைக் கூறி உதவியை நாடினார்.

இதனை அறிந்த மாவட்டச் செயலாளர்கள் 12 மணிநேரத்திற்குள் அவர்களுக்கு 'இ-பாஸ்' மற்றும் வாகனம் ஏற்பாடு செய்து, தந்தையை தன் மகன் மற்றும் மனைவியைச் சென்றடைய உதவி செய்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை அறியும்போது, திமுகவினருடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

'பயனடைந்தவர் பாராட்டும் பாராட்டே உண்மையான பாராட்டு!' - இதயத்திலிருந்து வரும் பாராட்டும் ஆகும்!

உணவாகவே தயாரித்துக் கொடுங்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் கோரிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்காகவே, 'ஏழை - எளியோருக்கு உணவு' என்ற திட்டத்தை உருவாக்கினோம். திமுக நிர்வாகிகளுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்தார்கள். லட்சக்கணக்கான மக்களுக்கு உணவுகள் வழங்கி இருக்கிறோம். உணவுப் பொருட்கள் கொடுத்தால் சமையல் செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருந்த ஆதரவற்றவர்கள் அவர்கள்!

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்லி அவர்களும் நம்மை வாழ்த்தி மகிழ்ந்துள்ளார்கள்.

அதேபோல், உங்களின் உதவியையும் பெறுவதற்கு நாங்கள் 'நல்லோர்கூடம்' என்ற மெய்நிகர் தளத்தை உருவாக்கினோம். இன்று, திமுக நிர்வாகிகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இணைந்து லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு உதவியுள்ளனர்.

கொளத்தூரில் உள்ள இளைஞர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கியதில் தொடங்கி, திருநங்கை ஒருவர் கோவில்பட்டியில் உள்ள வீடற்றவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கியது வரை, அனைத்துத் தரப்பு மக்களும் உதவ முன்வந்துள்ளனர்.

நாட்கள் செல்லச் செல்ல, உணவு கேட்டுவரும் அழைப்புகள் மட்டுமல்லாது; உணவு தயாரிக்கவே போதுமான வசதி இல்லாமல் மக்கள் துன்புறுவதை உணரமுடிந்தது. மக்கள் இந்தக் கடினமான சூழ்நிலையில் பசியால் வாடக்கூடாது என்பதை உறுதி செய்ய ஏழை எளியோருக்கு உணவு என்ற முயற்சியின் கீழ் 239 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் 73 சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒருவாய் உணவுக்கே சிரமப்படுவதைப் பார்த்து 28 லட்சம் ஆரோக்கியமான சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை இந்த அமைப்பின்மூலம் கொடுத்து உதவி உள்ளோம். அப்படி உணவளித்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது!

விழுப்புரம், வீரமன்ணூரில் தன்னார்வலர்கள் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த போது, ஒரு சிறுமி, உணவுப் பொட்டலத்தை வாங்கிய பின்னும் அந்தப் பகுதி முழுவதும் உணவு விநியோகம் செய்து முடிக்கும்வரை வீட்டுக்குள் செல்லாமல் தெருவோரமாகத் தன்னார்வலர்களைப் பார்த்து வணங்கியவாறு நின்றுகொண்டிருந்தாள்.

சென்னையின் பல்வேறு தொகுதிகளுக்கு நானும் சென்று முகக்கவசம், கிருமிநாசினி, மளிகைப்பொருட்கள், உணவுப்பொருட்கள், நிதி உதவிகள் வழங்கினேன். தமிழகத்தில் அனைத்து மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை திமுகவினர் வழங்கினார்கள். இவை அனைத்தையும் சென்னையில் இருந்தே நான் மேற்பார்வை பார்த்து வந்தேன். தினந்தோறும் காணொலிக் காட்சிகள் மூலமாக அனைவரிடமும் பேசி வந்தேன்.

எனக்கே இது வித்தியாசமான அனுபவம் ஆகும். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொலி காட்சிக் கூட்டங்களை நான் நடத்தி இருக்கிறேன். அனைவரது கருத்துகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

'மக்களிடம் கற்றுக் கொள்' என்று அண்ணா சொல்வார்கள். அதேபோல், தினமும் ஒவ்வொரு தரப்பு மக்களுடனும் நான் நடத்திய உரையாடல் மூலமாக மக்களின் தேவைகள், விருப்பங்கள், கோரிக்கைகளை அறிந்து கொண்டேன். அவற்றைத்தான் எனது அறிக்கையாக அரசுகளுக்கு எடுத்துச் சொன்னேன்.

மக்களின் தேவைகளை அரசுக்குச் சொல்லும் வழிகாட்டியாக இந்த காணொலிக் கூட்டங்கள் அமைந்திருந்தன!

எங்கோ ஒரு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழரையும் இந்தக் காணொலி மூலமாகப் பார்த்தேன்; தமிழ்நாட்டின் மூலையிலுள்ள ஒரு கிராமத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாகப் பயன்பெற்ற ஒரு மூதாட்டியின் முகத்தையும் பார்த்தேன்!

இந்தக் கரோனா காலத்திலும் வீட்டில் நான் தனியாக இல்லை; உலக மக்களோடு ஒருவனாக, அவர்களது துன்ப துயரங்களைச் செவிமடுத்துக் கேட்பவனாக இருந்தேன்.

ஒருவரைச் செயல்பட வைப்பது சூழ்நிலைகள் அல்ல; எண்ணங்கள் தான்!

நாம் அரசாங்கம் இல்லை;

நாம் ஆளும்கட்சியும் அல்ல;

ஆனால் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு ஆளும்கட்சி நினைத்தால் செய்ய முடிந்ததை, நாம் செய்து காட்டி இருக்கிறோம்.

மக்கள் நம்மிடம் வைத்த கோரிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதே தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு மக்கள் மிக மோசமான நிலைமையில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்துவிட்டோம்.

மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கு உள்ளது. அரசாங்கம் தன்னுடைய வளத்தை வைத்து மக்களை வளப்படுத்த வேண்டும்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் ஒப்படைத்துள்ளோம். ஏழு லட்சம் கோரிக்கை மனுக்களை, மாவட்ட வாரியாகப் பிரித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டத் தொடர் முயற்சிகளைத் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

இந்தக் கடினமான சூழ்நிலையிலும் திமுகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பேரிடர் தொடங்கிய நாள் முதல் நிவாரணப் பணியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரவு பகல் பார்க்காமல் தன்னலமற்று சேவை புரிந்து, தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ முன்வந்த திமுக உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம் அனைவரின் ஒன்றுபட்ட பலமே தமிழ்நாட்டை இந்தப் பேரிடரிலிருந்து மீட்கும் பாலமாக அமையும்!

நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் இந்தப் பேரிடரிலிருந்து எளிதாக மீள முடியும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!

வருகின்ற காலம் சவாலான காலம். இன்னும் தொற்று முழுமையாகக் குறையவில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

மக்களின் எதிர்காலமும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது.

மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாங்கங்கள் இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால், அந்த அரசாங்கம் குறித்துக் கவலைப்படாமல் நமக்கு நாமே துயரங்களைத் துடைக்க முடியும் என்பதை 'ஒன்றிணைவோம் வா' திட்டம் உணர்த்தி இருக்கிறது.

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக நான் கண்டது நம் மக்களின் நம்பிக்கை! நம் மக்களின் இரக்க குணம்! இதன் மூலமாக நமக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறக்கிறது.

ஒன்றுபட்டு தமிழகத்தின் பெருமையை, வளத்தை மீண்டும் மீட்டெடுப்போம். அதுவரை நானும் திமுகவும் உங்களின் குரலாக இருந்து ஒலிப்போம்; உங்களுடன் துணைநிற்போம்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x