Published : 30 May 2020 04:22 PM
Last Updated : 30 May 2020 04:22 PM

பிரதமர் மோடியின் ஆறு ஆண்டு கால ஆட்சி; ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த மக்கள் விரோத ஆட்சி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கே.எஸ்.அழகிரி - பிரதமர் மோடி: கோப்புப்படம்

சென்னை

பிரதமர் மோடியின் ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த மக்கள் விரோத ஆட்சி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"பிரதமர் மோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்

முக்கிய அம்சங்கள்:

பிரதமர் மோடியின் ஆறு ஆண்டு ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை 23 சதவிகிதம் அதிகரிப்பு.

கடந்த 11 ஆண்டுகளில் 44 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி 3.1 சதவிகிதமாக கடும் வீழ்ச்சி. நிதி பற்றாக்குறை அதிகரிப்பு. தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக வீழ்ச்சி.

வங்கி மோசடி செய்த பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு ரூபாய் 68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி. ஆனால், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுப்பு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 விகிதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்த நன்கொடை ரூபாய் 985 கோடியில், பாஜகவுக்கு மட்டும் ரூபாய் 915 கோடி. பாஜக ஒரு கார்ப்பரேட் ஆதரவு அரசு என்பதற்கு இதுவே சான்று.

கரோனாவினால் மக்கள் அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். வேலை, வருமானம் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிக்கும் மக்களுக்கு நேரிடையாக நிதியுதவி செய்யாத 6 ஆண்டு பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சியே.

பிரதமராக மோடி பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் சாதனை கடிதம் எழுதியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு இந்த ஆறு ஆண்டுகளில் புரிந்த சாதனைகள் என்ன? இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? இதுகுறித்து ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கடமையாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயல்நாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு என ஐந்தாண்டுகளுக்கு 10 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், முதல் ஐந்தாண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

தேர்தலில் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்காமல் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, வாக்குகளைப் பெற்று மீண்டும் 2019இல் பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த ஆறு ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது சாதனைகளா? வேதனைகளா? என்பதை ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாண்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியல் ஆய்வக நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டு நிதியாண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி, மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு தற்போது ஆசியாவிலேயே மோசமான நிலையில் உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதத்தில் இருந்து 4.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக கடுமையாக குறைந்துள்ளது. கடந்த 44 காலாண்டுகளில் இத்தகைய வீழ்ச்சியை முதன்முறையாக இந்தியா கண்டுள்ளது.

ஜனவரி - மார்ச் காலாண்டு என்பது கரோனா பாதிப்புக்கு முந்தைய காலமாகும். இந்த வீழ்ச்சியை உலக தர நிர்ணய அமைப்புகள் அனைத்தும் உறுதி செய்துள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமமற்ற வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக கிரெடிட் சூயிஸ்ஸி அறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் மோசமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட 30 நகரங்களில், இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் அதிக அளவிலான ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தது தற்போதுதான் நடந்துள்ளது. உலகிலேயே பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அதிக அளவில் நிகழும் நாடாக இந்தியா மாறியுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் சர்வே தெரிவிக்கிறது.

மத்தியில் மோடி அரசு பதவியேற்றபின் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை விதிகளை மீறி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை இல்லாமல் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த பாஜக அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. மோடி பிரதமரான பிறகு, பசுக்கள் தொடர்பான வன்முறை மற்றும் கும்பல் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதற்கு பாஜகவின் மதவெறி அரசியலே காரணமாகும்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு நிதியுதவியும், ஊழலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கடந்த 2016 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 சதவிகிதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆறு தேசியக் கட்சிகளுக்கு மொத்தம் வழங்கப்பட்ட நன்கொடையான ரூபாய் 985 கோடியில், பாஜகவுக்கு மட்டும் ரூபாய் 915 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே அறக்கட்டளை பாஜகவுக்கு ரூபாய் 405 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை பாஜகவுக்கு ஒரு குறிப்பிட்ட அறக்கட்டளை வழங்குவதற்கு பின்னாலே இருக்கிற மர்மம் என்ன ? பாஜகவுக்கு வழங்கப்பட்ட 98 சதவீத நன்கொடைகளில் வருமான வரித்துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணோ, முகவரியோ இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு வாரி வழங்கியுள்ளன. ஏழு தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கிய நன்கொடை ரூபாய் 1,397.90 கோடி. இதில் பாஜகவுக்கு வழங்கப்பட்டது ரூபாய் 1,027.34 கோடி. இது மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம் ஆகும்.

ஆக, பாஜக அரசு ஒரு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஊழல் அரசு என்று சொல்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்த நன்கொடை பெறுவதில் பாஜக நிகழ்த்திய முறைகேடுகள் குறித்து வருமான வரித்துறையோ, தேர்தல் ஆணையமோ இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய அமைப்புகள் எல்லாம் பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத முதல் பிரதமர் மோடி. நாடாளுமன்ற விவாதங்களிலோ, அமைச்சரவை ஆட்சி முறையிலோ நம்பிக்கையில்லாதவராக மோடி விளங்கி வருகிறார். ஜனநாயக அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், சிபிஐ - சிபிஐ மோதல், ரிசர்வ் வங்கி - அரசு மோதல், உச்ச நீதிமன்றம் - அரசு மோதல் நடந்தது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சம்பவம் நடந்தேறியது. முதல் முறையாக பாதுகாப்புத் துறையின் முக்கிய ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து திருடு போயின.

உலக அளவில் பட்டினியோடு வாழும் மக்கள் கொண்ட 117 நாடுகளில், இந்தியா 102 ஆவது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளியிடுவதில் 2 ஆண்டுகள் தாமதம் ஆனது. சில முக்கிய அம்சங்களை தவிர்த்துவிட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான குற்ற அறிக்கை கடுமையான தணிக்கைக்குப் பிறகு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிரிமினல் மயமான அரசியலுக்கு பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் வழக்கும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்மயானந்தா மீதான வழக்கும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகி, தற்போது நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை குழுவில் இடம்பெற்றுள்ள பிரக்யாசிங் தாக்கூர் மீதான மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு சான்றுகள், மேலும் டிஎஸ்பி தேவேந்தர் சிங் வழக்கும் பல்வேறு காரணங்களால் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தேர்தல் நிதியாக ரூ.10 கோடியை ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் பாஜக பெற்றுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக இதே நிறுவனத்திடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பாஜகவின் தீவிரவாத எதிர்ப்பு வேஷம் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியில் படுபாதாளத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் கையில் பணம் இல்லை. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு பொருளாதாரப் பேரழிவிலிருந்து விடுபட இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், மரணங்களும் நாளுக்கு நாள் பலமடங்கு கூடி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்து வருகிறது. இத்தோடு கடுமையான பொருளாதாரப் பேரழிவை நாடு எதிர்கொண்டு வருகிறது. இதிலிருந்து சாதாரண ஏழை, எளிய மக்களை மீட்க, அவர்களுக்கு நிதி வழங்கி, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்கள் அடைந்த பயன் என்ன?

இதனால், மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிக மிகப் பொருத்தமாக இருக்கும். இதை மக்களிடையே பரப்புரை செய்வது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் கடமையாகும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x