Published : 30 May 2020 04:12 PM
Last Updated : 30 May 2020 04:12 PM

கழிப்பிடமே வசிப்பிடமான கொடுமை: அட்டப்பாடி மூதாட்டியின் கண்ணீர்க் கதை

சிதிலமடைந்து கிடக்கிறது அந்த வீடு. அதன் ஓரமாக 6 அடிக்கு 4 அடி நீள, அகலத்தில் கட்டப்பட்ட சிறு கழிப்பறை இருக்கிறது. அதன் முன்னே விறகடுப்பு, நசுங்கிய அலுமினிய வடசட்டி, சில ஈயப் பாத்திரங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள். கழிப்பிடத்தினுள் நுழைந்தால் ஒரு எவர்சில்வர் தூக்கு, சிறு சிறு பாக்கெட்டுகளில் மளிகைப் பொருட்கள். அவ்வளவுதான்.

கதவுகூட இல்லாத இந்தக் கழிப்பறையில்தான் காலம் தள்ளுகிறார் 80 வயது மூதாட்டி திம்மக்கா. கேரள மாநிலம் அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் ஒட்டிய சிறிய சந்தில்தான் இருக்கிறது இவரது வசிப்பிடம். “நான் சமைக்கிறது, சாப்பிடுறது, தூங்குறது எல்லாமே இங்கேதான்” என்று ஆரம்பித்து இந்த மூதாட்டி தன் கதையைச் சொல்லும்போது, அதிர்ச்சி மிகுந்து நம் கண்கள் குளமாகிவிடுகின்றன. வறுமையின் எல்லையில் வாழும் இந்த மூதாட்டிக்கு அரசு அதிகாரிகள் கொடுத்திருக்கும் ரேஷன் கார்டு பணக்காரர்களுக்குரியது என்பதுதான் கொடுமை.

“என் கணவர் பேரு நஞ்சப்ப கவுண்டர். விவசாயம் செஞ்சுட்டிருந்தார். எங்களுக்கு ஒரு மகள், மகன். ரெண்டு பேரும் வெளியூர்ல செட்டில் ஆகிட்டாங்க. எப்பவாச்சும் ஒரு தடவை என்னைப் பார்க்க வந்திட்டிருந்தாங்க. 20 வருசத்துக்கு முன்னால என் கணவர் காலமாகிட்டார். அதுக்கப்புறம் பிள்ளைகளும் வர்றதை மறந்துட்டாங்க. அவங்க இப்ப எங்கிருக்காங்கன்னும் தெரியலை. இங்கிருந்து 2 மைல் தூரத்துல எங்களுக்கு 1 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த நிலப் பத்திரத்தை இங்கிருக்கிற பஞ்சாயத்து மெம்பர்கிட்ட கொடுத்து வச்சேன். அது என்னாச்சுன்னே தெரியலை. அதே பஞ்சாயத்து மெம்பர்தான், இந்த வீட்டுல இருக்கும்போது இந்தக் கக்கூஸைக் கட்டிக் கொடுத்தார். அதுக்கு 25 ஆயிரம் ரூபாயைப் பஞ்சாயத்து பணத்துலயே கட்டினதா சொன்னாங்க. அதுக்கப்புறம் இந்த வீடு பொல பொலன்னு இடிஞ்சு போச்சு.

வேற வீடு கட்டித்தரச் சொல்லி அந்த வார்டு மெம்பர்கிட்ட கேட்டேன். அவர் இன்னைக்கு வரைக்கும் எட்டிப் பார்க்கலை. ரெண்டு வருஷம் முந்தி பெய்த மழையில வீடு சுத்தமா இடிஞ்சு விழுந்துடுச்சு. அதுக்குப் புதுசா அரசாங்கத்துல வீடு கட்டிக் கொடுக்கிறதா சிலர் வந்து எழுதிட்டுப் போனாங்க. வீட்டைப் பார்க்க அதிகாரிகளும் வந்தாங்க. ஆனா, அவங்களை இங்கே இருக்கிற பஞ்சாயத்து ஆளுகளே தடுத்துட்டாங்க. இங்கே சுத்தியிருக்கிற சிலர் இந்த வீட்டோட இடத்தைப் புடிச்சு வச்சுட்டு, ‘இது எங்க இடம்’னு சொல்றாங்க. எனக்காகப் பேச யாருமே இல்லை. கடைசியில கக்கூஸ்ல வாழ வேண்டிய சூழலுக்கு வந்துட்டேன்… என்ன பண்றது?” என்று ஆற்றாமையுடன் சொல்கிறார் திம்மக்கா.

இவரது நிலை குறித்து அறிந்த பாலக்காடு மாவட்ட மனித உரிமை கவுன்சில் அமைப்பின் தலைவர் ஷிபு, துணைத் தலைவர் தேக்குவட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் இங்கு வந்தார்கள். இவரது கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இவரைப் பற்றிய பூர்விக ஆதாரங்களைச் சேகரிக்கும் பொருட்டு, தகவல் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டு புதூர் பஞ்சாயத்துக்கு எழுதியுள்ளனர். மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் ராதாகிருஷ்ணன்.

“தன் தாத்தா, அப்பா சகிதம் சின்ன வயசுலேயே அட்டப்பாடிக்கு குடி வந்துவிட்டதாக இந்த மூதாட்டி சொல்கிறார். அப்ப இவங்க குடும்பம் விலைக்கு வாங்கிய நிலத்தில்தான் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இவர் ஆதரவற்ற நிலைக்கு மாறிய பின்னர் அந்த நிலத்தை அந்த பிளாக் மெம்பர் தன் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டதாகவே பலர் சொல்கிறார்கள். தவிர இங்கே சுத்தியிருக்கிற ஆதிவாசிகள் இவர் வீட்டிற்கான ஒரு பகுதி நிலத்தையும் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடுவதாகச் சொல்கிறார்.

சுற்றுப்புற தோட்டங்காடுகளில் மாங்காய், கொய்யா பறிச்சுட்டுப் பக்கத்தில் உள்ள ஹை ஸ்கூல் முன்பு விற்று கிடைத்த காசில் ஜீவனம் செய்து வந்திருக்கிறார். ரெண்டு மாசத்துக்கு மேல கரோனாவினால ஸ்கூல் சுத்தமா லீவு. அதனால காசுக்கு வழியில்லை. இங்கே இருக்கிற கம்யூனிட்டி கிச்சன்ல சாப்பாடு வாங்கி சாப்பிட்டும், அக்கம்பக்கத்துல சிலர் தரும் உணவிலும் உயிர் வாழ்ந்து வருகிறார். ஏழை எளியவர்களுக்கு கிலோ ரூ. 2 வீதம் ரேஷன் அரிசி 15 கிலோ வரை கிடைக்கும். இவருக்கோ பணக்காரர்களுக்கான நீல நிற ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அதுல குடும்ப வருமானம் ரூ.150 என்றே எழுதப்பட்டிருக்கிறது. இவருக்கு ஒரு கிலோ ரூ.4 வீதம் 2 கிலோ ரேஷன் அரிசி மட்டும் போடறாங்க. அரை லிட்டர் மண்ணெண்ணெய் கிடைக்குது. மின்சாரம்கூடக் கிடையாது.

இப்படியொரு கொடுமைய வேற எங்கேயும் நாங்க பார்த்தது கிடையாது. பக்கத்துலதான் பஞ்சாயத்து ப்ளாக் மெம்பர், ஜில்லா பஞ்சாயத்து மெம்பர், அமைச்சரின் உதவியாளர் எல்லாம் இருக்காங்க. போலீஸ் அவுட் போஸ்ட் கூட இருக்கு. ஆனா, யாருமே இந்தக் கொடுமையைக் கண்டுக்கல” என்று வருத்தத்துடன் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

“ஒற்றை ஆளாய் இப்படி கஷ்டப்படறீங்ளே... முதியோர் இல்லத்தில் பேசி சேர்த்துவிடுகிறோம் போறீங்களா?” என்று திம்மக்காவிடம் கேட்டபோது, “அதெல்லாம் எனக்கு வேண்டாம்பா. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது. இடிஞ்சு கிடக்கிற வீட்ல ஒரு கூரைய மட்டும் போட்டுக் கொடுங்க. அது போதும். மிச்ச காலத்தை ஓட்டிடுவேன்” என கையெடுத்துக் கும்பிடுகிறார்.

இந்த மூதாட்டியின் துயர் துடைக்க அரசுதான் ஆவன செய்ய வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x