Last Updated : 30 May, 2020 02:55 PM

 

Published : 30 May 2020 02:55 PM
Last Updated : 30 May 2020 02:55 PM

இளநீர் திருட்டால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை- 30 வீடுகள் சேதம், கடும் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் நடைப்பயிற்சிக்காக செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் தேடிய போது, தலைவன்வடலி பாலத்தின் அருகே முற்புதருக்குள் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும், தலை இல்லாமல் முண்டமாகக் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த தலைவன்வடலி கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

சத்தியமூர்த்தியின் தலையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். கொலைஹ் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சத்தியமூர்த்தியின் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சத்தியமூர்த்தியின் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவரது தலை கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து, அதனைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தலைவன்வடலி கிராம மக்களுக்கும், அருகேயுள்ள கீழ கீரனூர் கிராம மக்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது தெரியவந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் கீழ கீரனூரை சேர்ந்த சிலர் தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இதனை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். மேலும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழ கீரனுரில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிலர் இளநீரை திருடியுள்ளனர். தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் இளநீரைத் திருடியதாகக் கூறி பேசியுள்ளனர். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாகவே சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கீழ கீரனுரை சேர்ந்த ராஜேஷ், பழனிச்சாமி, குட்டி என்ற முனியசாமி, ஸ்டீபன்ராஜ், ஸ்ரீதர், வினோத் ஆகிய 6 பேரையும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையால் ஆத்திரமடைந்த தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கீழ கீரனூர் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

தலைவன்வடலி மற்றும் கீழ கீரனுர் கிராமங்களை சேர்ந்தவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார், தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் இந்த பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x