Published : 30 May 2020 02:43 PM
Last Updated : 30 May 2020 02:43 PM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 32 கிளைகள் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சங்கரன்கோவில் கிளையில் கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது:
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 32 கிளைகள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 158 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவி வழங்குகின்றன. நகைக் கடனும் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்ளில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே ரூ.78.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் 67 குழுக்களுக்கு ரூ.5 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதனை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா பேசும்போது, “திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளுடன் 2212 சுயஉதவிக் குழுக்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுடன் 2299 குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் கடந்த நிதியாண்டில் 1699 குழுக்களுக்கு ரூ.78.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கரோனா சிறப்புக் கடனாக தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படும். தகுதியான அனைத்து குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குருமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, முதன்மை வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன், துணைப்பதிவாளர் முத்துச்சாமி, பொது மேலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT