Published : 30 May 2020 01:43 PM
Last Updated : 30 May 2020 01:43 PM

மருத்துவக் கல்வியில் ஓபிசிக்கு ஒதுக்கீடு வழங்காத விவகாரம்; சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வது சரியல்ல; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்காத விவகாரத்தில், காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வது சரியல்ல என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்காமல் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியைப் பாஜக அரசும் தொடர்வது சரியானதல்ல. அந்தத் தவறைச் சரி செய்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்ட போதே, அதைப் பின்பற்றி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் மத்திய அரசு தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்கும் அகில இந்திய அளவிலான இடங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், 2007 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய அளவிலான மருத்துவ இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. திமுக இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடங்கிவைத்த இந்த சமூக அநீதி இன்று வரை தொடர்வது தற்போது தெரியவந்திருக்கிறது.

இதனை உடனடியாக சரி செய்து இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதுதானே தற்போதைய மத்திய அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும்? அதை விட்டுவிட்டு, திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்த பிழையைப் பாஜகவும் தொடர்வது தவறல்லவா?!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோராக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதிலும் மத்திய அரசு காட்டுவது அவசியமல்லவா?!

எனவே, மருத்துவம் தொடர்பான அனைத்துவகை படிப்புகளிலும் மத்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளிக்கும் இடங்களில் எந்தச் சிக்கலுமின்றி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடங்களை ஒதுக்கிட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா உருவாக்கி, கட்டிக் காப்பாற்றித் தந்திருக்கிற 69% இட ஒதுக்கீட்டின்படி, தமிழகம் வழங்குகிற அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

அகில இந்திய அளவிலான மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டிய 2007-ம் ஆண்டிலிருந்து 2014 வரை மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம் அதனை மறந்திருந்த திமுகவுக்கு, அவர்களது வழக்கப்படி அதிகாரத்தில் இல்லாதபோதுதான் பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி திடீரென அக்கறை பிறந்திருக்கிறது.

இது உண்மையான அக்கறை என்றால், கூட்டணிக் கட்சிகளைக் கூட்டிவைத்து வெற்றுத்தீர்மானம் போடுவதைத் தவிர்த்து, இத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாவத்திற்கு மு.க.ஸ்டாலின் உரிய பரிகாரம் தேட வேண்டும்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x