Published : 30 May 2020 12:23 PM
Last Updated : 30 May 2020 12:23 PM

முகக்கவசங்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி?- கோவை மாநகராட்சி வழிகாட்டல் 

கரோனா காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது.

உலகெங்கும் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் சவாலாக விளங்கும் பல விஷயங்களில் மிக முக்கியமானது முகக்கவசத்தின் பயன்பாடு. பலர் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முகக்கவசங்களைப் பயன்படுத்துவதால், அவை ஒவ்வொரு பகுதியிலும் பெருங்குப்பைகளாகத் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அப்புறப்படுத்துவதில் தூய்மைப் பணியாளர்கள் படாதபாடு படுகின்றனர். பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களில் கரோனா உட்பட எத்தகைய நோய்த் தொற்றுகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது கடினம். இதனால், அவற்றைக் கையில் தொட்டு எடுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆபத்துகள் அதிகம்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், முகக்கவசங்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
''கோவை மாநகராட்சி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் கழிவு மேலாண்மை தொடர்பான சுகாதாரக் கட்டமைப்புகளைத் தயார் செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவற்றில் அடங்கும். அந்த வகையில், ஏற்கெனவே மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிலிருந்து மருத்துவக் கழிவுகள் தனியாகப் பெறப்பட்டு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுபோல் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகள், சானிடரி நாப்கின்கள், பேபி டயப்பர்கள் மற்றும் பல்வேறு மருத்துவக் கழிவுகளைத் தனியாக ஒரு பையில் சேமித்து, தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பது அவசியம்.

மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைத் தவிர்த்து, துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் மழைக்காலங்களில் இத்தகைய கழிவுகளைச் சிறப்பாகக் கையாள மாநகராட்சி எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x