Published : 30 May 2020 10:55 AM
Last Updated : 30 May 2020 10:55 AM
கர்நாடக, ஆந்திர எல்லையோர கிருஷ்ணகிரி மாவட்ட நேரலகிரி கிராமத்தில் வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ளதைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கரோனா ஊரடங்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவது நாடு முழுவதும் விவசாயிகளிடையே மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பகுதி வேப்பனப்பள்ளி. இப்பகுதியில் உள்ள நேரலகிரி கிராமத்தில் நேற்று (மே 29) மாலை எருக்கன் செடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் உள்ளதை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ முருகன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து இன்று (மே 30) காலை வேளாண்மை துறை இணை இயக்குநர் ராஜசேகர், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் மோகன், பையூர் ஆராய்ச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
"விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை"
இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த மாதிரியான வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவ்வகை வெட்டுக்கிளிகளை கோடை காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் காணலாம்.
இந்த வெட்டுக்கிளிகள் எருக்கன்செடி போன்ற பால் சுரக்கும் செடிகளில் மட்டுமே இருக்கும். மேலும், வடமாநிலங்களில் பயிர்களைத் தாக்கக் கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் இவை கிடையாது. இந்த வகை வெட்டுக்கிளிகளை சாதாரணமாக தண்ணீரில் வேப்பம் எண்ணெயை கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தி விடலாம்.
இவை விவசாய பயிர்களை தாக்காது என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை" என்றார்.
இந்த ஆய்வின்போது வேப்பனப்பள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ முருகன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT