

கன்னியாகுமரி வந்த டிஜிபி அலுவலக ஊழியர் உட்பட 6 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குமரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 பேராக உயர்ந்தது.
சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு வருபவர்களை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி மையத்தில் வைத்து கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் முடிவுகள் வரும் வரை சுகாதார துறையினர் அவர்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், தனியார் விடுதிகளில் தனிமைபடுத்தி பாதுகாத்து பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஏற்கெனவே கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று 31 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணி புரிந்துவரும் குமரி மாவட்டம் ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் சொந்த ஊர் திரும்பினார்.
அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை போன்று சென்னையில் இருந்து காரில் வந்த 25 வயது கணவர் மற்றும் 23 மனைவி, மற்றுமொறு 26 வயது கணவர் 25 வயது மனைவி உட்பட இரு தம்பதியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 6 பேர்கள் கரோனா தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 37 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனால் குமரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 பேராக உயர்ந்தது