Published : 29 May 2020 03:53 PM
Last Updated : 29 May 2020 03:53 PM
புதுச்சேரியில் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று (மே 28) வரை 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 40 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆகவும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆகவும் உள்ளது.
ஏற்கெனவே 12 பேர் குணமடைந்து வீடு திரும்ய நிலையில், தற்போது புதுச்சேரியில் 7 பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும் என 9 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (மே 28) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 40 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தற்போது புதுச்சேரியில் நெட்டப்பாக்கம், லாஸ்பேட்டை, அரும்பார்த்தபுரம், குருமாம்பேட் ஆகிய பகுதியைச் சேர்ந்த 7 பேரும், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 9 பேர் குணமாகியுள்ளனர்.
அதே வேளையில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது. அதுபோல் 6,917 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6,826 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 29 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது" என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் மட்டும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை.
குறிப்பாக முத்தியால்பேட்டை சோலை நகரில் 6 பேரும், முத்தையா முதலியார் வீதி, மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT