Published : 29 May 2020 02:56 PM
Last Updated : 29 May 2020 02:56 PM
கோயம்பேடு காய்கறி, உணவு தானிய விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு , உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “1996 ம் ஆண்டு முதல் கொத்தவால் சாவடியில் இயங்கிய காய்கறி சந்தை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் மொத்த காய்கறி விற்பனை உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24-ம் தேதி 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவியதால் மே 5-ம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்டிஏ சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “கரோனா தோற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை”. என தெரிவித்தார்.
அப்போது இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் எனத் தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT