Published : 29 May 2020 02:11 PM
Last Updated : 29 May 2020 02:11 PM

வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்காமல் இருக்க நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

இந்தியாவில் படையெடுக்கும் வெட்டுக்கிளி பூச்சியை தடுக்க தமிழகத்தில் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:

“உலகத்திலேயே பாலைவன வெட்டுக்கிளிகள் தான் மிகவும் அபாயகரமான பூச்சியினம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிவித்துள்ளது. கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விளை பயிர்களை பதம்பார்த்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவை நோக்கி கூட்டம், கூட்டமாக படையெடுத்து வருகின்றன.

இந்த வெட்டுக்கிளிகள், சாதாரணமாக தம் வலசையை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது நம் உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று தமிழ்நாடு வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இருந்தாலும் இவற்றின் இடப்பெயர்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்க முடியாது. எனவே தமிழகம் விவசாய பூமி என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு‌ மிக கவனம் செலுத்தி தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகளை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, வெட்டுக்கிளியின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிப்பதோடு ஏதேனும் ஆபத்து ஏற்படின் அதற்கான துரித நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x