Published : 29 May 2020 02:09 PM
Last Updated : 29 May 2020 02:09 PM

செவிலியர் மற்றும் மருத்துவர் மறைவுக்கான காரணங்களை மூடிமறைக்கும் தமிழக அரசு; முத்தரசன் குற்றச்சாட்டு

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

செவிலியர் மற்றும் மருத்துவர் மறைவுக்கான காரணங்களை மூடிமறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 29) வெளியிட்ட அறிக்கை:

"ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா கடந்த 27 ஆம் தேதி கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற வேண்டிய தலைமை செவிலியர் கரோனா தொற்று சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் கருதி அரசு பணி நீட்டிப்பு செய்ததால் பணியில் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பிரிவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவிலியர் பிரிசில்லா உயிரிழந்துள்ளார்.

இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் மருத்துவக் குறிப்பேட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்ததை ஆதாரப்பூர்வமாக குறித்துள்ளனர். இந்த நிலையில் தலைமை செவிலியர் பிரிசில்லா கரோனா தாக்குதலால் மரணமடையவில்லை என்று கூறுவது நம்பத்தகுந்த தகவல் அல்ல. இது தொடர்பாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது.

இதே போல் கரோனா பெருந்தொற்று பகுதியில் பணியாற்ற ஒப்பந்த பணியில் நியமிக்கப்பட்ட மருத்துவர் அப்பிராஸ் பாஷா (யுனானி), கரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் உயர்தனி சிறப்பு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 27-ம் தேதி உயிழந்து விட்டார். இவரது மறைவுக்கு கரோ தொற்று காரணமல்ல என தெரிவிப்பதும் நம்பத்தகுந்த செய்தி அல்ல என்பது தெரியவருகிறது.

கரோனா தொற்று தாக்குதலில் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபடி தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர் ஆகியோர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்தக் கடமைப் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள செவிலியர் மற்றும் மருத்துவர் மறைவுக்கான காரணங்களை மூடிமறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகளில், முன் களப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் அரசின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

மறைந்த மருத்துவர் அப்பிராஸ் பாஷா மற்றும் தலைமைச் செவிலியர் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கி, அவர்களது குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், கரோனா தொற்று பாதிப்புகளை மறைத்து பேசும் செயலில் தமிழ்நாடு அரசு ஈடுபடக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x