Published : 29 May 2020 01:09 PM
Last Updated : 29 May 2020 01:09 PM
கயத்தாறு அருள்மிகு முத்து கிருஷ்ணேஸ்வரர் திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணி தொடக்க விழா இன்று நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
திருப்பணிக்கான பூஜைகளை செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அர்ச்சகர்கள் ரகு பட்டர், ராமு பட்டர், ராம சுப்பிரமணியன் பட்டர் செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், 'சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள தொன்மையான அருள்மிகு முத்துகிருஷ்ணேஸ்வரர் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தை புனரமைத்து புதுப்பித்தல் பணிக்கு ரூ.97.50 லட்சம், திருக்கோயில் பிரகார மண்டபம் மற்றும் மடப்பள்ளி மேல்தளம் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.17 லட்சம், திருக்கோயில் சன்னதிகள் மற்றும் மண்டபங்கள் கருங்கல் சுவர்கள் பழுதுபார்த்து சீரமைத்தல் பணிக்கு ரூ.7.37 லட்சம், திருக்கோயில் மண்டபங்களில் தற்போது உள்ள கல் தளத்தை சீரமைத்தல் பணிக்கு ரூ.7.40 லட்சம், மதில் சுவர்கள் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.2.92 லட்சம், சன்னதிகள் மற்றும் கல் மண்டபங்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல் பணிக்கு ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.1.34 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முத்துகிருஷ்ணேஸ்வரர் கோயிலில் பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முழுமையாக நடைபெற்று முடிந்ததும் குடமுழுக்கு பெருவிழா நடைபெறும்' என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சிவகலைபிரியா, அதிமுக நிர்வாகிகள் செல்வகுமார், வினோபாஜி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT